ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு நிறைவு..!! விண்ணப்பித்த காளையர்களின் விவரம்…

Author: kavin kumar
12 January 2022, 8:21 pm
Quick Share

மதுரை: அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மதுரையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவது பற்றி மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழக வணிக வரி துறை அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சயிர் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்திற்கு பின்பு அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறும்போது, மதுரை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெறும். பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள், ஓர் இடத்தில் கலந்து கொண்டால் மற்றோர் இடத்தில் பங்கேற்க அனுமதி இல்லை. ஒவ்வொரு போட்டியிலும் தலா 700 மாடுகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும். காளைகள் மற்றும் வீரர்களுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்யலாம். இ-சேவை மையங்களில் பதிவு செய்யலாம். மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்களுக்கு காலை, மதியம் இரண்டு வேளை உணவு வழங்கப்படும். தற்காலிக கழிப்பறை வசதியும் ஏற்பாடு செய்யப்படும் என்றும் கூறினார்.

இதனை தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், மதுரை மாவட்ட கலெக்டர் அனிஷ் சேகர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் வருகிற 16ந்தேதி ஞாயிற்று கிழமையில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும். இதனால், ஊரடங்கை முன்னிட்டு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள், திட்டமிடப்பட்ட 16ந்தேதிக்கு பதிலாக அதற்கு அடுத்த நாளான 17ந்தேதி நடைபெறும்.அலங்காநல்லூர் விழா குழுவினருடன் ஆலோசனை நடத்திய பின்பு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் கொரோனா பரவல் காரணமாக ஜல்லிக்கட்டு போட்டிகளில் 300 மாடுபிடி வீரர்கள் மற்றும் 150 பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கு நேரடியாக டோக்கன் வழங்காமல் இந்த முறை ஆன்லைனில் பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார். அதன்படி நேற்று மாலை 5:30 மணிக்கு தொடங்கிய இணையதள முன்பதிவு இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைந்தது. இந்த நிலையில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் பங்கேற்க 1,999 மாடுபிடி வீரர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்று மதுரை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மேலும் ஜல்லிக்கட்டில் 4,534 காளைகள் பங்கேற்க அவற்றின் உரிமையாளர்கள் விண்ணப்பித்துள்ளதாக அறிவித்துள்ள நிர்வாகம், தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் மற்றும் காளைகள் ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஜல்லிக்கட்டிலும் தலா 700 காளைகள், 300 வீரர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதி என்ற நிலையில் ஏராளமானோர் விண்ணப்பம் செய்துள்ளனர்.

Views: - 295

0

0