கோவையில் நாளை பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் : எங்கு செலுத்தலாம்? ஆட்சியர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
19 January 2022, 8:08 pm
Booster Dose - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் நாளை முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பது: தமிழ்நாட்டில் கொரோனா தொற்றினை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு கட்டமாக 10ம் தேதி முதல் மருத்துவ பணியாளர்கள் சுகாதார பணியாளர்கள் முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்ட, இணை நோய் உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக தமிழ்நாடு அரசு வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளது. அதன்படி நாளை அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில் 9 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

இந்த தடுப்பூசி மையங்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படும். இந்த முன்னெச்சரிக்கை தடுப்பூசியினை செலுத்த, இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி ஒன்பது மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும்.

இதுவரை கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10,478 தகுதி வாய்ந்த முன்களப்பணியாளர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தடுப்பூசி பெற்றுள்ளனர்.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் தகுதி உள்ள அனைவரும் தவறாது முதல் தவணை, இரண்டாம் தவணை மற்றும் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி பயனடைய வேண்டும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Views: - 263

0

0