காலை உணவு நஹி.. அடிப்படை வசதி நஹி : வாக்குகள் எண்ணும் பணி தாமதமானதால் பரபரப்பு!!
Author: Udayachandran RadhaKrishnan12 October 2021, 10:53 am
வாக்கு எண்ணும் ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லாததால் சில பகுதிகளில் வாக்கு எண்ணும் பணி தாமதமாகியுள்ளது.
தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், தென்காசி, நெல்லை, கள்ளக்குறிச்சி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்றது.
இந்நிலையில் இன்று இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் குன்றத்தூர், மரக்காணம், காட்பாடி உள்ளிட்ட சில பகுதிகளில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவது தாமதம் ஆகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த பகுதிகளில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கான அடிப்படை வசதி மற்றும் காலை உணவு போன்ற வசதிகள் செய்யவில்லை.
இதனால் குன்றத்தூர் பகுதியில் வாக்கு எண்ணும் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருவதால் இந்த பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் சமூக இடைவெளி இல்லாமல் நெருக்கடியாக இருக்க வேண்டிய நிலை உள்ளதாலும், வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படாமல் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து அப்பகுதிகளில் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. வாக்கு எண்ணிக்கை சில மணி நேரம் தாமதமானதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
0
0