செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு : பத்திரிகையாளர் சுதந்திரத்தை உறுதி செய்க.. திமுகவுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

Author: Udayachandran RadhaKrishnan
25 January 2024, 12:05 pm
EPS
Quick Share

செய்தியாளர் மீது கொடூர தாக்குதல்.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு : பத்திரிகையாளர் சுதந்திரத்தை உறுதி செய்க.. திமுகவுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்தவர் நேசப் பிரபு. இவர் தனியார் செய்திதொலைக்காட்சியில் செய்தியாளராக கடந்த ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது மர்மநபர்கள் நேற்று கொடூரத் தாக்குதல் நடத்தியுள்ளனர். தாக்குதலுக்க முன் செய்தியாளர் காவல்துறையிடம் உதவி கேட்ட ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த சம்பவத்திற்க கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப் பக்கத்தில், திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர் நேசபிரபு கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

மர்ம நபர்கள் தன்னை தாக்குவதற்கான அச்சமான சூழ்நிலை நிலவுவதாக நேசபிரபு தொடர்ச்சியாக காவல்துறையிடம் முறையிட்டும், தாக்குதலுக்கு 4 மணிநேரங்களுக்கு முன்பே தெரிவித்தும் இந்த விடியா அரசின் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தன போக்குடன் செயல்பட்டது கடும் கண்டனத்திற்குரியது.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளால் ஏற்கனவே பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல் தமிழகத்தில் நிலவி வருவதை நான் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டி வந்தும், எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்ததன் விளைவே இன்று செய்தியாளர் மீது நடத்தப்பட்ட கொலைவெறி தாக்குதலாகும்.

பாதிக்கப்பட்ட செய்தியாளர் நேசபிரபு விரைவில் பூரண உடல்நலம் பெற்று வீடுதிரும்ப எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவதோடு, அவர் குணமடைய உரிய மருத்துவ சிகிச்சை வழங்குமாறும், கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுத்து, பத்திரிக்கையாளர்கள் சுதந்திரமாக செயல்படுவதற்கான சூழ்நிலையை உறுதிசெய்யுமாறு இந்த விடியா அரசை கேட்டுக்கொள்கிறேன்.

மேலும், ஆட்சிக்கு வந்த நாள் முதலே சந்திசிரிக்கும் வண்ணம் சட்டம் ஒழுங்கை சீர்குலையச் செய்துள்ள, காவல்துறையை தன் கையில் வைத்திருப்பதாக சொல்லும் இந்த விடியா அரசின் பொம்மை முதல்வர், தன் கும்பகர்ண தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டு இதுபோன்ற சம்பவங்கள் இனியாவது நிகழாவண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்துகிறேன் என பதிவிட்டுள்ளார்.

Views: - 211

0

0