லொக்கா வழக்கையும் பாதித்த கொரோனா…! சிபிசிஐடி அதிகாரிக்கு பாதிப்பு..! விசாரணை நிறுத்தம்
11 August 2020, 8:08 pmகோவை: அங்கொட லொக்கா விசாரணை குழுவில் இருக்கும் சிபிசிஐடி அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
இலங்கையின் நிழல் உலக தாதா அங்கொட லொக்கா. போலி பாஸ்போர்ட்டில் கோவை வந்து, சேரன்மாநகரிலுள்ள வாடகை வீட்டில் பல மாதங்கள் தங்கியிருந்தார். அவருடன் இலங்கையை சேர்ந்த அமானி தான்ஜி என்பவரும் தங்கினார்.
இந்நிலையில், லொக்கா மர்மமான முறையில் இறக்க அவர் மாரடைப்பால் இறந்தாக கூறி சான்றிதழ் பெற்று, மதுரைக்கு சடலத்தை எடுத்து சென்று எரித்தனர்.
இது தொடர்பாக, அமானி தான்ஜி, மதுரை வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, திருப்பூரை சேர்ந்த தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். வழக்கு சிபிசிஐடி போலீசார் வசம் உள்ளது. கைது செய்யப்பட்ட 3 பேரையும், காவலில் எடுத்து விசாரிக்க கோரிய மனு நாளை விசாரணைக்கு வருகிறது.
இந்நிலையில், சிபிசிஐடி குழு மதுரை சென்று விசாரணை நடத்தி விட்டு கோவை திரும்பியது. அங்கொட லொக்கா சடலத்தை எரிக்க உதவிய நபர்களிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்த விசாரணை குழுவில் உள்ள ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆகையால் வழக்கு விசாரணை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.