தமிழகம், புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு…மீனவர்களுக்கும் எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

Author: Rajesh
9 May 2022, 3:10 pm
rain-updatenews360
Quick Share

சென்னை: தமிழகம், புதுவையில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் கடந்த வார இறுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. அது மேலும் வலுப்பெற்று காற்றழுத்த ஆழ்ந்த தாழ்வு மண்டலமாக மாறியது. நேற்று காலை அந்த குறைந்த காற்றழுத்தம் புயலாக மாறியது. இந்த புயலுக்கு இலங்கை நாடு வழங்கிய அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது.

அசானி என்றால் சிங்கள மொழியில் பெருஞ்சினம் என்று அர்த்தமாகும். இந்த புயல் தீவிர புயலாக நேற்று இரவு மாறியது. அசானி புயலின் தாக்கம் காரணமாக ஒடிசாவின் தென் மாவட்டங்கள் மற்றும் வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

பலத்த காற்று வீசக்கூடும். நாளை மறுநாள் முதல் ஒடிசா, வடக்கு ஆந்திரா, மேற்கு வங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அசானி புயலால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்றும், நாளையும் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மே 11 முதல் 13ம் தேதி வரை வட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் புயல் காரணமாக 12ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Views: - 825

0

1