சென்னையில் மீண்டும் மழை: இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்பு…சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!!
Author: Aarthi Sivakumar18 January 2022, 3:28 pm
சென்னை : சென்னை உள்பட கடலோர மாவட்டங்களில் நேற்று திடீரென மழை பெய்த நிலையில், இன்றும், நாளையும் லேசான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
வடகிழக்கு பருவ காற்றின் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் நேற்று அதிகாலை முதல் திடீர் மழை பெய்தது. லேசான காற்றுடன் கூடிய மிதமான மழை தொடர்ந்து பெய்ததால், சென்னையில் நேற்று முன்தினம் நிலவிய வெப்ப சூழல் மாறி குளுமையான வானிலை நிலவியது.
வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக வட கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும். சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும்.
நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்யும். அதிகபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்ஷியஸாக பதிவாகும். தமிழகம் மற்றும் புதுச்சேரியில், நாளை ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். வரும், 19ம் தேதி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான இடங்களில் வறண்ட வானிலை நிலவும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
0
0