450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம் : தமிழக அரசு அதிரடி

26 August 2020, 1:31 pm
Quick Share

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்திய 450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பணியாளர்கள் நேற்று போராட்டம் நடத்தினர். போராட்டத்தின்போது 2 மணி நேரம் மதுக்கடைகள் அடைக்கப்பட்டதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், கொரோனா பாதித்து உயிரிழந்த ஊழியர்களுக்கு தலா ரூ.50 லட்சம் நிவாரணம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி உள்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.

இந்தநிலையில், தமிழகம் முழுவதும் நேற்று 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்ட 450 டாஸ்மாக் பணியாளர்கள் திடீர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது குறித்து டாஸ்மாக் கடை அதிகாரி ஒருவர் கூறுகையில், தமிழகத்தில் உள்ள 5 ஆயிரத்து 330 கடைகளில் ஏறத்தாழ 40 கடைகளில் தான் பணியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். போராட்டம் 2 மணி நேரம் நடக்கவில்லை.

பல கடைகளில் காலை 10 மணி முதல் காலை 10.30 மணி வரை மட்டுமே போராட்டம் நடந்தது. அந்தவகையில் காலை 10.30 மணிக்கெல்லாம் கடைகள் திறக்கப்பட்டு விட்டன. டாஸ்மாக் ஊழியர்கள் பணியிட மாற்றம் மீதான நடவடிக்கை பழிவாங்கும் போக்கு இல்லை. நிர்வாக நலன் மற்றும் அவசரம் அவசியம் கருதியே அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 44

0

0