சிறையில் சொகுசு வசதி பெற்ற வழக்கு: சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

Author: kavin kumar
25 August 2021, 7:54 pm
Quick Share

லஞ்சம் கொடுத்து சிறையில் வசதிகள் பெற்ற வழக்கில் சசிகலாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். அதன்பிறகு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சசிகலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடிந்து கடந்த ஜனவரி மாதம் 27ஆம் தேதி விடுதலையானார். முன்னதாக, பெங்களூரு சிறையில் இருந்த போது, சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்க அப்போதைய சிறை அதிகாரிகள் ரூ.2 கோடி லஞ்சம் பெற்றதாக ஐபிஎஸ் அதிகாரி ரூபா குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக அதாவது சுடிதாருடன் சசிகலா ஷாப்பிங் சென்று வருவது போன்ற புகைப்படங்களும் வெளியாகி அந்த சமயத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குற்றச்சாட்டை முன்வைத்த ரூபா ஐபிஎஸ், அடுத்தடுதடுத்து பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் உண்மை என்று இதுகுறித்து விசாரணை நடத்திய ஓய்வு பெற்ற மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்திருந்தது.ஆனால், லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்திருந்த வழக்கில் அறிக்கை தாக்கல் செய்யப்படாமல் இருந்தது. இதனிடையே, சென்னை ஆழ்வார்பேட்டையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கீதா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.எஸ். ஒகா தலைமையிலான அமர்வு, ஊழல் தடுப்பு அதிகாரிகள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை 2 மாதத்திற்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று கடுமையான எச்சரிக்கையை விடுத்தனர்.

இந்த நிலையில், கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முன்பு லஞ்ச ஒழிப்பு போலீசார் சசிகலாவுக்கு எதிரான குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். சிறையில் இருந்து வெளியே வரும் போது, அரசியலில் ஈடுபடப்போவது உறுதி என்று தெரிவித்த சசிகலா, அடுத்த சில நாட்களில் அரசியலில் இருந்து விலகியிருப்பதாக அறிவித்தார். இது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், தற்போது சசிகலாவின் ஆடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. அவரது அரசியல் என்ட்ரி விரைவாக அரங்கேறும் என்று கூறப்படுவதற்கிடையே, தற்போது நீதிமன்றத்தில் சசிகலா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Views: - 201

0

0