சல்யூட்! ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

31 January 2021, 9:24 am
Quick Share

பயணி ஒருவர் தவறவிட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள, 50 பவுன் நகைகளை ஆட்டோ டிரைவர் ஒருவர் நேர்மையாக போலீசாரிடம் ஒப்படைத்தார். அவரது நேர்மையை கண்டு வியந்த போலீசார் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

நாம் சிறுவயதில் இருக்கும் போதிருந்தே, நேர்மை தான் உயரிய கொள்கை என பாடப்புத்தகத்தில் படித்து வருகிறோம். ஆனால், அதனை வாழ்க்கையில் எத்தனை பேர் கடைபிடிக்கிறோம் என்றால், மிக சொற்பமே. ஆனால் இந்த ஆட்டோ டிரைவர் நேர்மைக்கு மறுபெயராக ஜொலிக்க, நெட்டிசன்களின் பாராட்டு மழையில் நினைந்து வருகிறார். அப்படி என்ன செய்துவிட்டார் என்கிறீர்களா?

சென்னை – குரோம்பேட்டையிலுள்ள லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் பால் பிரைட் (வயது 57). மளிகை கடை நடத்தி வரும் இவரது மகனுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. கடந்த 27 ஆம் தேதி, அவரது மகனுக்கு, குரோம்பேட்டை, ஜி.எஸ்.டி. சாலையிலுள்ள, அமல அன்னை ஆலயத்தில் திருமணம் சிறப்பாக நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்த பின், 50 பவுன் நகை மற்றும் ஒரு பட்டுப் புடவையை ஒரு பையில் எடுத்துக் கொண்டு, ஆட்டோவில் பால் பிரைட் தனது வீட்டிற்கு சென்றார். வீட்டிற்கு சென்ற பின் தான், ஆட்டோவிலேயே நகை பையை மறந்து வைத்துவிட்டு வந்ததை உணர்ந்திருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பையை ஆட்டோவில் தவறவிட்டதாக, குரோம்பேட்டை போலீசாரிடம் புகார் அளித்தார். அவரது புகாரின் அடிப்படையில், ஆட்டோவை போலீசார் தேட துவங்கினர். ஆனால் நேர்மையான அந்த ஆட்டோ டிரைவர், ஆட்டோவில் இருந்த நகைப்பையை வீட்டில் சென்று கண்டதும், இவர் தான் நகையை வைத்து சென்றிருப்பார் என அவதானித்து, பால் பிரைட்டின் வீட்டிற்கே சென்று நகை பையை ஒப்படைத்தார். பின் போலீசுக்கும் அவரே தகவல் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட ஆட்டோ டிரைவர் அஸ்தினாபுரத்தை சேர்ந்தவர். இவரது பெயர் சரவணக்குமார் (வயது 27). 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகை பையை நேர்மையுடன் ஒப்படைத்த சரவணகுமாரை, போலீசார் பாராட்டினர். சமூக வலைதளங்களிலும் அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Views: - 0

0

0

1 thought on “சல்யூட்! ரூ.20 லட்சம் மதிப்புள்ள நகைகளை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்

Comments are closed.