ஜப்பான் தொழில்நுட்பத்தில் சென்னையில் சிக்னல் கம்பம் : வாகன ஓட்டிகளிடையே வரவேற்பு!!
14 August 2020, 2:19 pmசென்னை : ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம் சென்னையில் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் போக்குவரத்து நெரிசலுக்கு பஞ்சமே இருக்காது. இதனால், வாகனங்களில் செல்பவர்கள், போயி சேர வேண்டிய இடத்திற்கு சரியான நேரத்தில் சென்றடைய முடியாமல் தவித்து வருகின்றனர்.
எனவே, முக்கிய பகுதிகளில் அரசு உயர்மட்ட மேம்பாலங்களை கட்டி, போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்தபாடில்லை.
இந்த நிலையில், ஜப்பான் நாட்டு தொழில்நுட்பத்துடன் கூடிய போக்குவரத்து சிக்னல் கம்பம், சென்னை காமராஜர் சாலையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சோதனை முயற்சியாக பொருத்தப்பட்டுள்ள இந்தக் கம்பத்தில், தூரத்தில் வரும் வாகன ஓட்டிகளுக்கும் சிக்னல் தெரியும் விதமாக, கம்பம் முழுவதும் எல்.இ.டி. விளக்குகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
மேலும் பச்சை நிற சிக்னலின் போது GO என்றும், ஆரஞ்சு நிற சிக்னலின் போது LISTEN என்றும், சிவப்பு நிற சிக்னலின் போது STOP என்னும் மின்னணு அறிவிப்பு பலகை பொருத்தப்பட்டுள்ளது.
வெளிநாட்டு தொழில்நுட்பத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த நவீன சிக்னல் கம்பம், வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில், இதனை விரிவுபடுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.