லியோவுக்கு நோ சொன்ன தியேட்டர்கள்… அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி தவிக்கும் லியோ.. தயாரிப்பாளர் காரணமா..?

Author: Babu Lakshmanan
17 October 2023, 4:23 pm

லியோ படத்தை வெளியிட தியேட்டர்கள் மறுப்பு… அடுத்தடுத்து சிக்கலில் சிக்கி தவிக்கும் லியோ.. தயாரிப்பாளர் காரணமா..?

லியோ திரைப்படத்தை வெளியிட சில முக்கிய திரையரங்குகள் மறுப்பு தெரிவித்ததால் நடிகர் விஜய் ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

விஜய் நடிப்பில் உருவான லியோ திரைப்படம் வரும் 19ஆம் தேதிக்கு திரைக்கு வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். லியோ படத்தின் சிறப்பு காட்சிகளுக்கு ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

லியோ படம் வெளியீட்டு தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து பல்வேறு தடங்கல்களை சந்தித்து வருகிறது. டிரெய்லர் வெளியீட்டின் போது ரோகிணி தியேட்டரில் இருக்கைகளை ரசிகர்கள் உடைத்து சேதப்படுத்தியது, இசை வெளியீட்டு விழா கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது என பல்வேறு தடைகள் ஏற்பட்டன.

அதுமட்டுமில்லாமல், லியோ படத்திற்கு அதிகாலை 4 மற்றும் 7 மணிக்கு சிறப்பு காட்சிகளை திரையிட அனுமதிக்க வேண்டும் என்ற படக்குழுவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்தது. படம் வெளியாகும் 19ம் தேதி முதல் 24ம் தேதி வரையிலான 5 நாட்களுக்கு 5 காட்சிகளை வெளியிட மட்டும் அனுமதி வழங்கப்பட்டது.

இதனால், லியோ படத்தை வெளியிடுவதில் அரசியல் தலையீடு இருப்பதாக விஜய் ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் லியோ படத்திற்கான முன்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் உள்ள சில முக்கிய திரையரங்குகள் லியோ படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்திருப்பது ரசிகர்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அதாவது, தயாரிப்பாளர் லலித்குமாருடன் ஏற்பட்ட பிரச்சனையால் AGS,ரோகிணி உள்ளிட்ட திரையரங்குகள் லியோ படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்து வருகின்றன. படத்தின் முதல் வார வசூலில் 80% தொகையை தயாரிப்பாளர் கேட்பதாகவும், இதற்கு தியேட்டர்கள் உரிமையாளர்கள் மறுப்பு தெரிவிப்பதால், இருதரப்பினரிடையே உடன்பாடு எட்டப்படவில்லை என்று திரையரங்குகள் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், இனி தியேட்டர்களில் டிரெய்லர்களை வெளியிட மாட்டோம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். லியே படம் வெளியிட இன்னும் ஒரு நாளே இருக்கும் சூழலில், லியோ படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டிருப்பது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?