லியோ பட விவகாரம்… ரெட் ஜெயன்ட்-க்கு கொடுக்காததால் தான் இவ்வளவு பிரச்சனை ; ஜெயக்குமார் பகீர் குற்றச்சாட்டு…!!

Author: Babu Lakshmanan
17 October 2023, 4:49 pm
Quick Share

இங்கு ஆட்சியா நடக்கிறது ? ஆளும் கட்சி சார்ந்தவர்களுக்கும், பொது மக்கள் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

அதிமுக கட்சியின் 52 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சி கொடியேற்றி வைத்து தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

அதன் பின், சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பூத் வாரியாக, பூத் கமிட்டி அமைத்தல், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அமைப்புகளை ஏற்படுத்துதல் முதலான பணிகளை மேற்பார்வையிடுவதற்காக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில், அதிமுக மாநாட்டின் போது மரணம் அடைந்த குடும்பத்தினருக்கு எடப்பாடி பழனிசாமி நிதி உதவி வழங்கினார். 8 குடும்பத்தினருக்கு தலா ஆறு லட்சம் வழங்கினார். நிதி உதவி பெற்றவர்களுடன் குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்கள் சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது :- புரட்சி தலைவர் மறைவுக்கு பின்பு இந்த இயக்கம் இருக்காது என்று நினைத்தார்கள். புரட்சி தலைவி கட்சியை, கொடியை மீட்டு சிறப்பாக ஆட்சி நடத்தினார். அம்மா வழியில் எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு 2 கோடி தொண்டர்கள் வரை அதிகரித்து மிக பெரிய இயக்கமாக வளர்த்து உள்ளார்.

கழக பொதுச் செயலாளர் தலைமையில் மாவட்ட மேற்பார்வையாளர் கூட்டம் 52ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இன்று நடைபெற்ற கூட்டத்தில் கள அளவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. கழக பொதுச் செயலாளர் தெளிவாக கூறி உள்ளார், எனக் கூறினார்.

திருச்செங்கோடு குழந்தை கடத்தல் குறித்த கேள்விக்கு, இன்று ஆட்சியா நடக்கிறது, ஆளும் கட்சி சார்ந்தவர்களுக்கும், பொது மக்களுக்கும் என யாருக்கும் பாதுகாப்பு இல்லை, என்றார்.

லியோ திரைப்படம் குறித்த கேள்விக்கு, “திரைத்துறையில் லட்சக்கணக்கானோர் பணி புரிகின்றனர். எங்கள் ஆட்சியில் இப்படி இல்லை. ரெட் ஜெயண்ட் நிறுவனத்திற்காகத் தான் இப்படி செய்கிறார்கள். சினிமா துறையில் திமுகவினர் சர்வாதிகார ஆட்சி நடத்தி வருகின்றனர். அதிமுக ஆட்சியில் எங்காவது ஒருசில குற்ற சம்பவங்கள் நடந்திருக்கலாம். ஆனால், தற்போது உள்ள திமுக ஆட்சியில் குழந்தை கடத்தல், பாலியல் துன்புறுத்தல் போன்று பல்வேறு குற்ற சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகிறது.

மக்கள் பிரச்சனையில் மாற்றத்தை கொண்டுவர இந்த அரசு செயல்படவில்லை. மருத்துவறையிலும் போதுமான வசதிகளை செய்யவில்லை. பல்வேறு வகையில் காய்ச்சல் வந்தும் அதை கட்டுப்படுத்த முடியாத அரசாக திமுக இருந்து வருகிறது. காவிரி விவகாரத்தில் திமுக அரசு காலம் கடத்த செயல்படுகிறது.

மீனவர்கள் பிரச்சனையில் காகிதம் மூலம் தீர்வு கான முடியாது, இரு நாடுகளும் பேசி தீர்வு காணவேண்டும், எனக் கூறினார்.

Views: - 265

0

0