சென்னைக்கு மட்டும் ரூ.4000 கோடி செலவா…? இதுக்கு 400 படகு வாங்கி விட்டிருக்கலாம்… திமுகவை விளாசும் ஜெயக்குமார்…!!

Author: Babu Lakshmanan
30 November 2023, 9:14 pm

மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு முறையாக கையாளவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் மழை பாதிப்புகளை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பார்வையிட்ட பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது :- மழைநீர் வடிகால் அமைத்து கால்வாய்களை தூர்வாரும் நடவடிக்கையில் அரசு தோல்வி அடைந்துவிட்டது.

குடியிருப்பு பகுதிகளில் மழை நீரில் கழிவு நீர் தேங்கியுள்ளது. அங்கு தேவையான முன்னெச்சரிக்கை எடுக்கப்படவில்லை. ஒரு சொட்டு மழை நீர் கூட தேங்காது என சொன்னார்கள். ஆனால் தற்போது நிலைமை அப்படி இல்லை.

சென்னை மாநகராட்சி தூங்கிவிட்டது. முதலமைச்சர் தொகுதியே நீர் சூழ்ந்துள்ளது. சென்னையை விட சென்னை புறநகர் மிக மோசமான நிலையில் உள்ளது. அமைச்சர்கள் சொல்லும் பொய்யை போல யாரும் சொல்ல முடியாது. இப்படி பொய் பேசுகிறோமே, மக்கள் என்ன நினைப்பார்கள் என்ற எண்ணம் கூட இல்லை.

ரூ.4000 கோடி செலவு செய்ததற்கு 400 படகு வாங்கி கொடுத்திருந்தாலும் மக்கள் பயனடைந்திருப்பர். நிர்வாக திறமை இல்லாத அரசாக திமுக அரசு உள்ளது. மழை பாதிக்கப்பட்ட இடங்களில் மருத்துவ முகாம்கள் நடத்தப்படவில்லை. உணவு வழங்கப்படவில்லை. சென்னையில் பாதிப்பில்லை என்பதை போன்ற பிம்பத்தை ஏற்படுத்த அரசு முயற்சிக்கிறது. முதலமைச்சர் வார்த்தைக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் அளிப்பது இல்லை.

எம்.ஜி.ஆர் நினைவு தினத்தை தான் பொருட்படுத்தவில்லை, பெரியார் நினைவு தினத்தையாவது பொருட்படுத்தலாமே. பெரியார் நினைவு நாளில் திமுகவுக்கு கொண்டாட்டம் தேவையா? கருணாநிதி நூற்றாண்டு நிகழ்ச்சியை டிசம்பர் 24ம் தேதிக்கு பதில் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும், என தெரிவித்துள்ளார்.

  • virat kohli explained about likes of anveet kaur photos நான் தப்பான ஆள் இல்லை- பிரபல நடிகையின் விவகாரத்தில் விராட் கோலி திடீர் விளக்கம்…