தண்ணீர் தேங்கினால் புகார் அளிக்க தொலைத்தொடர்பு எண் அறிவிப்பு : சென்னை மாநகராட்சி..!!
29 October 2020, 11:24 amசென்னை : சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கினால், புகார் அளிக்க தொலைத் தொடர்பு எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முதல் தொடங்கியது. இந்த நிலையில், நேற்று நள்ளிரவு முதல் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 20 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மயிலாப்பூரில் 200 மி.மீ. மழையும், சென்னை டிஜிபி அலுவலகத்தில் 178 மி.மீ. மழையும், அம்பத்தூரில் 90 மி.மீ. மழையும், ஆலந்தூரில் 78.5மி.மீ. மழையும், சோழிங்கநல்லூரில் 77.2 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் நவம்பருக்கு பின் சென்னையில் ஒரே நாளில் அதிகளவு மழை பெய்துள்ளது.
விடிய விடிய பெய்து வரும் கனமழையினால், சென்னையின் முக்கிய பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் வெள்ள நீர் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிக்குள்ளாகியுள்ளனர். முக்கிய இடங்களில் முட்டி வரையில் தண்ணீர் தேங்கியுள்ளதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, சாலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரை சென்னையில் உள்ள 22 சுரங்கப்பாதைகளின் மூலம் அகற்றும் பணிகளில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சென்னையில் தண்ணீர் தேங்கினால் பொதுமக்கள் 1913 எண்ணில் புகார் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடமாடும் மருத்துக் குழுக்கள், பொது சமையல் அறை, அம்மா உணவகங்கள் தயாராக உள்ளது என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
பலத்த மழை காரணமாக சென்னை விமான நிலையத்திலிருந்து பெங்களூரு, சேலம், புனே, ஹவுகாத்தி, அந்தமான், டெல்லி, லண்டன், தோகா ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமானங்களின் புறப்பாடில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
0
0