“கொரோனா பரவல் காரணமாக மூடப்பட்ட கோயம்பேடு மார்கெட்” – திறக்கப்படும் தேதி அறிவிப்பு..!

28 August 2020, 9:14 am
Quick Share

கோயம்பேடு காய்கறி சந்தை படிப்படியாக திறக்கப்படும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடு சந்தைக்கு வந்து சென்ற பலருக்கு கொரோனா தொற்று உறுதியானது. தமிழகத்தின் குட்டி வூகான் நகரம் எனவும் கோயம்பேடு சந்தை விமர்சனத்துக்கு உள்ளானது இதன் காரணமாக கோயம்பேடு சந்தைக்கு அதிகாரிகள் சீல் வைத்து மூடினர். இதற்கு மாற்றாக காய்கறி சந்தை திருமழிசையில் செயல்பட்டு வருகிறது.

தற்போது சென்னையில் ஓரளவு கொரோனா கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் கோயம்பேடு சந்தையை மீண்டும் திறக்க வணிகர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டு வந்தது.

இதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று கோயம்பேடு காய்கறி சந்தையை நேரில் ஆய்வு செய்தார். அதன்பின் வணிகர் சங்க நிர்வாகிகளுடனும் ஆலோசனை நடத்தினார்.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கோயம்பேடு மொத்த வணிக வளாகத்தில் உள்ள அங்காடிகளை ஒவ்வொரு கட்டமாக திறப்பது எனவும், அதன்படி முதல் கட்டமாக உணவு தானிய மொத்த விற்பனை அங்காடி வரும் 18-ஆம் தேதி அன்றும், அதனைத்தொடர்ந்து காய்கறி மொத்த விற்பனை அங்காடி செப்டம்பர் 28-ஆம் தேதி திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கு அடுத்த கட்டமாக கனி அங்காடி, சிறு மொத்த காய்கறி அங்காடிகள் மற்றும் மலர் அங்காடிகள் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் கோயம்பேடு சந்தையில் உள்ள அனைத்து கடைகளிலும் கிருமி நாசினி வைத்திருக்க வேண்டும், தனி மனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன.

அதேபோல் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் ஒருவழிப்பாதை போக்குவரத்து அறிமுகப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கனரக சரக்கு வாகனங்கள் தினமும் மாலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரை மட்டுமே அங்காடி வளாகத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படும் எனவும், அங்காடி வளாகத்திற்குள் மூன்று சக்கர வாகனங்கள், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் செல்ல முற்றிலுமாக அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமும் அங்காடிக்கு வரும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் உடல் வெப்ப சோதனை மற்றும் தேவைப்படும் ரத்தப் பரிசோதனைகளை செய்த பின்னரே அங்காடிக்குள் அனுமதிக்கப்படுவர் எனவும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 1

0

0