கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை….! வானிலை மையம் அலர்ட்

9 August 2020, 3:01 pm
Quick Share

சென்னை: நீலகிரி மாவட்டத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

தென்மேற்கு பருவ மழையால் சில நாட்களாக கேரளா, தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களிலும் தொடர் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்து உள்ளது. இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

உள் தமிழகம், அதனை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 24 மணி நேரத்தில் கோவை, நீலகிரி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், திருவள்ளூர், சேலம், நாகப்பட்டினம், கரூர், திருச்சி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், கன்னியாகுமரி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.

பெரம்பலூர், மதுரை, சிவகங்கை, அரியலூர்,ராமநாதபுரம், விருதுநகர் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

48 மணி நேரத்தில் உள் தமிழகம் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை, புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் ஒரு சில பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. லட்சத்தீவு, குமரிக்கடல் உள்ளிட்ட பகுதிகளிலும் 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீச வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.