முதலமைச்சர் ஸ்டாலின் நாளை சேலம் வருகை : இரும்பாலையில் ஆய்வு செய்த அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்!!

Author: Udayachandran
19 May 2021, 3:41 pm
Senthil Balaji- Updatenews360
Quick Share

சேலம் : ரெம்டெசிவிர் மருந்தினை நோயாளிகளின் குடும்பத்தாரிடம் வாங்கி கொடுக்க நிர்பந்திக்கும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செந்தில்பாலாஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள கொரோனா பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகளவில் சிகிச்சை பெற்று வருவதால் ஆக்சிஜன் படுக்கை முழுவதும் நிரம்பியது. இதனையடுத்து மாற்று ஏற்பாடாக சேலம் இரும்பாலை அருகே 500 ஆக்சிஜன் படுக்கை வசதி கொண்ட தற்காலிக கொரோனா சிகிச்சை மையம் ஏற்பாடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனை இன்று நேரில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஆய்வு செய்தார். இதைத்தொடர்ந்து கொரோனா சிகிச்சை மையத்தை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது, ரெம்டெசிவிர் மருந்தினை நோயாளிகளின் குடும்பத்தாரை வாங்கி கொடுக்க நிர்பந்திக்கும் மருத்துவமனைகள் மீது உச்சபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

நாளை தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலின் இரும்பாலை கொரோனா மையத்தில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக நாளை காலை விமானம் மூலமாக சேலம் வருகை தருகிறார்.
நாளை முதலமைச்சர் ஆய்வின் போது பொதுமக்கள், கட்சி தொண்டர்கள் வர வேண்டாம்.
கொரோனா பரவல் அபாயம் காரணமாக தொண்டர்கள் வருகையை தவிர்க்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து கொரோனா மையத்திற்கு வர சிறப்பு ஆம்புலன்ஸ் ஏற்பாடுகள் செய்யப்படும். குறிப்பாக இரும்பாலை கொரோனா சிகிச்சை மையத்திற்கு ஆம்புலன்ஸ் கட்டணம் நிர்ணயம் ஏற்பாடு செய்யப்படும் என்றார்.

சேலத்தில் தனியார் மருத்துவமனை சில ஆக்சிஜன் வசதி இல்லை என்று நோயாளிகளுக்கு திருப்பி அனுப்புவது கண்டனத்துக்குரியது. சில தனியார் மருத்துவமனைகள் 80 படுக்கை வசதிகளுக்கு உள்ள இடங்களில் கூடுதலாக 160 படுக்கை வசதிகள் செய்வதால் இது போன்ற தட்டுப்பாடுகள் ஏற்படுவதாக கூறினார்.

மேட்டூர் அனல் மின் நிலையத்தில் தீ விபத்தால் ஏற்பட்ட பாதிப்பு சரி செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த தீ விபத்தால் மின்தட்டுப்பாடு எங்குமில்லை என்றார்.

இந்த ஆய்வின்போது சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் மாநகர காவல் ஆணையாளர் சந்தோஷ்குமார், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் பார்த்திபன், சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Views: - 192

0

0