வீட்டுக்கு ஒரு Scooty…மாதம் தோறும் மட்டன் பிரியாணி: அரசியல் வாக்குறுதிகளை ஓரங்கட்டிய ஆலய தேர்தல் வாக்குறுதி…!!

4 February 2021, 4:33 pm
nellai - updatenews360
Quick Share

நெல்லை: சட்டசபை தேர்தல் வாக்குறுதிகளை பின்னுக்கு தள்ளி, டயோசிசன் தேர்தலுக்கு சுயேட்சைகளின் வாக்கு சேகரிப்பு முறை பொதுமக்களை இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

தென்னிந்திய திருச்சபைக்கு உள்பட்ட திருநெல்வேலி திருமண்டலத்தில் சபையின் கட்டுப்பாட்டில் 500 தேவாலயங்களும், 120 டிடிடிஏ பள்ளிகளும், 10 கல்லூரிகளும் ஒரு பொறியியல் கல்லூரியும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளி ஒன்றும் உள்ளன. திருநெல்வேலி திருமண்டலத்தில் ஊர்களில் உள்ள பெருமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 7ஆம் தேதி நடைபெற உள்ளது.

திருநெல்வேலி திருமண்டலத்தில் சேகரமாக பிரிக்கப்பட்டுள்ள 115 ஊர்களில் டயோசீசனுக்கு 140 உறுப்பினர்களை தேர்வு செய்ய வேண்டும். இதில் வெற்றி பெறும் உறுப்பினர்கள் திருநெல்வேலி திருமண்டலத்தில் லே செகரட்டரி, கல்வி நிலவரக் குழு செயலாளர், பொருளாளர், உள்ளிட்டோரைத் தேர்ந்தெடுப்பார்கள். இதில் வெற்றி பெறுபவர்களே 500 தேவாலயங்கள், 120 டிடிடிஏ பள்ளிகளும், 10 கல்லூரிகளும் ஒரு பொறியியல் கல்லூரியும், ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகளை நிர்வாகம் செய்வர்கள்.


எனவே வரும் 7ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில் வெற்றி பெற கடும் போட்டி நிலவுகிறது. இந்த தேர்தலில் வேதநாயகம் அணி, டி எஸ் ஜெயசிங் என இரு அணிகளா போட்டியிடுகிறார்கள். இவை தவிர்த்து சிவந்திப்பட்டி சபைக்கு, கொங்கந்தான்பாறை ஊரில் உள்ள உறுப்பினர் பதவிக்கு சுயேட்சையாகப் போட்டியிடும் இருவர் சட்டமன்ற தேர்தலை விஞ்சும் விதமாக வாக்காளர்களை கவர்வதற்கு வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகிறார்கள்.

இவர்கள் தான் தாங்கள் வெற்றி பெற்றால் கொங்கந்தான் பாறை சேகரத்தில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுக்கு ஒரு ஹோண்டா ஆக்டிவா வாகனம் இலவசமாக வழங்கப்படும் எனவும் அறிவித்து அதிர வைத்திருக்கிறார்கள். இதுமட்டுமின்றி, பிரதி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை மட்டன் பிரியாணி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார்கள். 18 வயது முதல் 120 வயது வரை உள்ள அனைத்து பெண்களுக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு ஆகிய பண்டிகை தினங்களுக்கு இரண்டு பட்டு புடவை இலவசமாக வழங்கப்படும் என கூறி பெண் வாக்காளர்களை இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளனர்.


பெண்களுக்கு மட்டுமின்றி ஆண்களுக்கும் இரண்டு பட்டு வேஷ்டி சட்டை வழங்கப்படும். வேலை இல்லாத பெண்கள் சுயதொழில் தொடங்ககுவதற்காக தையல் மிஷின் இலவசமாக வாங்கி தருகிறோம் என்று தாறுமாறாக வாக்குறுதிகளை கொடுத்துள்ளனர். நோட்டீஸை வீடுவீடாக விநியோகித்து பிரச்சாரம் செய்யும் அவர்களிடம் எப்படி இதெல்லாம் சாத்தியம். பணம் எப்படி வரும் என்று கேட்டால் திருமண்டலத்தில் கீழ் உள்ள தேவாலயங்களின் குறைந்த பட்சம் தசமபாதம் மூலம் மட்டும் மாத வருமானத்தில் செய்து கொடுப்போம் என்கிறார்கள்.

அதேநேரம் சபையில் முக்கிய பொறுப்புகளுக்கு போட்டியிருகின்ற வேதநாயகம் அணி, டி எஸ் ஜெயசிங் அணிகள் அமைதியாக பிரச்சாரம் செய்து மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால் இரண்டு சுயேட்சைகள் தான் ஆசைவார்த்தை கூறி மக்களிடம் வாக்கு சேகரிக்கிறார்கள். சட்டசபை தேர்தலே தோற்றுவிடும் அளவுக்கு அங்கு பிரச்சாரம் களைகட்டியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 3

0

0