நீர்பிடிப்பு பகுதிகளில் உயர்ந்த நீர்மட்டம்…! பவானிசாகர் அணை திறக்க முதல்வர் உத்தரவு
12 August 2020, 9:53 amசென்னை: பவானிசாகர் அணையில் இருந்து வரும் 14ம் தேதி முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரம் பவானிசாகர் அணை. இந்த அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 105 அடி. சில நாட்களாக அணை நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டி வருகிறது.
ஆகையால் அணை நீர்வரத்து கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. அதன் காரணமாக அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரித்தது. கரையோர பகுதிகளில் உள்ள மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையும் விடப்பட்டது.
இந் நிலையில் பவானிசாகர் அணையிலிருந்து வரும் 14ம் தேதி முதல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டு உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி உள்ளதாவது:
120 நாட்களுக்கு திறக்கப்படும் 23,846.40 மில்லியன் கனஅடி நீரால் 1,03,500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். பவானி சாகர் அணையில் நீர் திறக்கப்படுவதால் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணை நீர்மட்டம் 101.10 அடியாக உள்ளது. நீர் இருப்பு 29.5 டிஎம்சி, நீர்வரத்து 5,644 கனஅடியாக இருக்கிறது. அணையிலிருந்து நீர் வெளியேற்றம் 1,200 கனஅடியாக உள்ளது.