தேங்காய் மற்றும் கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும் : தமிழ்நாடு வேளாண் பல்கலை., கணிப்பு!!

Author: Udayachandran
5 October 2020, 11:04 am
TNAU- updatenews360
Quick Share

கோவை: தேங்காய் மற்றும் கொப்பரைக்கு நல்ல விலை கிடைக்கும் என்று தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

இதுகுறித்து வேளாண் பல்கலைக்கழகம் தெரிவித்திருப்பதாவது: தோட்டக்கலை பயிர்களுக்கான, 2019-20ஆம் ஆண்டின் இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீட்டின் படி இந்தியாவில் தேங்காய் 21.53 இலட்சம் எக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு 146.95 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. இந்தியாவில் தேங்காய் உற்பத்தியில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் 89 சதவீதம் பங்களிக்கின்றன.

இந்திய தேங்காய் உற்பத்தியில் தமிழகம் 28 சதவீதம் பங்களித்து மூன்றாமிடம் வகிக்கிறது. கோயம்புத்தூர், திருப்பூர், தஞ்சாவூர், திண்டுக்கல், கன்னியாகுமரி, வேலூர், தேனி, கிருஷ்ணகிரி மற்றும் திருநெல்வேலி ஆகியவை தேங்காய் உற்பத்தி செய்யும் முக்கிய மாவட்டங்களாகும்.

வர்த்தக மூலங்களின் படி கடந்த பருவத்தைக் காட்டிலும் இந்த பருவத்தில் ஜனவரி முதல் ஆகஸ்ட் 2020 வரை தேங்காய் உற்பத்தி செய்யும் மாவட்டங்களில் உற்பத்தி குறைந்துள்ளது.

ஆயினும் தேவை நிலையாக உள்ளது. தற்போது பெருந்துறை சந்தைக்கு மைசூர் மற்றும் தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து கொப்பரை வரத்து உள்ளது. மேலும் இச்சந்தைக்கு ஜனவரி முதல் பிப்ரவரி 2021-இல் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலிருந்து தேங்காய் மற்றும் கொப்பரை வரத்து இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

Visit Gass Forest Museum, TNAU Insect Museum and Botanical Garden in  Coimbatore | Marriott

நல்ல பருவமழையினால் எதிர்வரும் பருவத்தில் தேங்காயின் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்புள்ளது. இச்சூழலில், விவசாயிகள் விற்பனை முடிவுகளை எடுக்க ஏதுவாக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் வேளாண் மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையத்தில் இயங்கி வரும் தமிழ்நாடு பாசன விவசாய மேம்பாட்டு திட்டத்தின் விலை முன்னறிவிப்புத் திட்டம் கடந்த 18 ஆண்டுகளாக ஈரோட்டில் உள்ள அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நிலவிய தேங்காய் மற்றும் கொப்பரை விலையினை ஆய்வு செய்தது.

மேலும் பெருந்துறை வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை மையத்தில் சந்தை ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டது. ஆய்வு முடிவின் அடிப்படையில் அக்டோபர்-டிசம்பர் 2020 வரை தரமான தேங்காயின் பண்ணை விலை ரூ.15 முதல் ரூ.17 வரை இருக்கும் மற்றும் நல்ல தரமான கொப்பரை கிலோவுக்கு ரூ.100 முதல் ரூ.110 வரை இருக்கும். மேலும் கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களிலிருந்து வரும் வரத்தை பொறுத்து விலையில் மாற்றங்கள் இருக்கும். எனவே விவசாயிகள் மேற்கூறிய சந்தை ஆலோசனை அடிப்படையில் விற்பனை முடிவுகளை எடுக்குமாறு பரிந்துரைக்கப்படுகின்றனர். இவ்வாறு வேளாண் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

Views: - 76

0

0