கோவையில் இன்று 228 பேருக்கு கொரோனா.! 6 ஆயிரத்தை தாண்டிய பாதிப்பு.!!
7 August 2020, 8:14 pmகோவை : கோவையில் இன்று ஒரே நாளில் 228 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,227-ஆக உயர்ந்துள்ளது.
கோவை அரசு மருத்துவமனை நர்சிங் கண்காணிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இவர் கடந்த இரண்டு நாட்களாக விடுமுறையில் இருந்துள்ளார். வீட்டில் இருந்தவருக்கு காய்ச்சல், தொண்டை வலி ஏற்பட்டுள்ளது. இதனால், கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனை முடிவில் அவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக இ.எஸ்.ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு மருத்துவமனையின் டீன் தெரிவித்தார்.
மேலும், கோவை வைசியாள் வீதியை சேர்ந்த 5 வயது குழந்தை உள்பட 4 பேர், மாதம்பட்டி செல்லப்பகவுண்டன்புதூரை சேர்ந்த இரண்டு குழந்தைகள் உள்பட 9 பேர், எஸ்.எஸ்.குளம் போலீஸ் குடியிருப்பு சேர்ந்த 5 வயது பெண் குழந்தை, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த 28 பேர், லட்சுமிபுரம் சின்னசாமி லே-அவுட் பகுதியை சேர்ந்த 3 பேர், சின்னவேடம்பட்டி முருகன் நகரை சேர்ந்த 3 பேர் மற்றும் செல்வபுரம், பீளமேடு, உக்கடம், ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியை சேர்ந்த மொத்தம் 228 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள், இ.எஸ்.ஐ மருத்துவமனை, கோவை அரசு மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள் மற்றும் கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகள், கொரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் 224 பேர் குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.