தீயணைப்பு வீரர்களுக்கு காட்டுத் தீ போல பரவிய கொரோனா! கோவையில் இன்று 294 பேர் பாதிப்பு!!

12 August 2020, 7:43 pm
Corona Cbe - Updatenews360
Quick Share

கோவை : கோவையில் தீயணைப்பு பயிற்சி பெற்று வந்த 22 வீரர்கள் உள்பட 294 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோவை, சரவணம்பட்டியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் கடந்த ஒருமாத காலமாக புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள தீயணைப்பு வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. கோவை, திருப்பூர், வேலூர், திருவள்ளூர், நாமக்கல், விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 60 வீரர்கள் பயிற்சி பெற்று வந்தனர். இந்நிலையில் அங்கு பணியாற்றி வந்த பாதுகாவலர் கொரோனா நோய்த் தொற்று பாதிப்புக்கு அண்மையில் உயிரிழந்தார்.

இதனைத் தொடர்ந்து பயிற்சிப் பெற்று வந்த 60 வீரர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 22 வீரர்களுக்கு கொரோனா நோய்த் தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்காலிக தீயணைப்பு பயிற்சிப் பள்ளி அடைக்கப்பட்டது. மற்ற வீரர்களும் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் கோவை துணை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் 55 வயது பெண் காவலர் பி.ஆர்.எஸ். காவலர் குடியிருப்பை சேர்ந்த 26 வயது ஆண் காவலர், வி.எச்.ரோடு காவலர் குடியிருப்பை சேர்ந்த 40 வயது ஆண், கோவை அரசு மருத்துவமனையின் 23 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களைத் தவிர பி.என்.புதூரில் 14 பேர், செல்வபுரம், விளாங்குறிச்சியில் தலா 12 பேர், கணபதியில் 9 பேர், மேட்டுப்பாளையம், ராமநாதபுரம், மதுக்கரையில் தலா 8 பேர், ஆர்.எஸ்.புரம், சிங்காநல்லூர் மற்றும் பீளமேட்டில் தலா 6 பேர் உள்பட 294 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 592 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவையில் இன்று 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.

Views: - 12

0

0