போர்க்கால அடிப்படையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் – நிதியமைச்சரிடம் காட்மா கோரிக்கை

26 March 2020, 6:57 pm
Cbe Cotma Demand - Updatenews360
Quick Share

கோவை : சிறு,குறு,நடுத்தர நிறுவனங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய நிதியமைச்சருக்கு காட்மா கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கோயம்புத்தூர்,திருப்பூர் மாவட்ட சிறு குறு ஊரகத்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர் சிவக்குமார் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பாதிப்பினால் முடங்கியுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு பல்வேறு நிவாரண உதவிகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று அறிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்புகளை காட்மா சங்கம் வரவேற்கிறது .

அதே நேரத்தில் நாட்டின் பெரும்பான்மையான வேலைவாய்ப்பை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களே வழங்கி வருகின்றன. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளால் இத்தொழில்கள் முடங்கியுள்ளன. தொழில் முனைவோர் பெரும் இழப்புகளை சந்தித்து வருகின்றனர்.

சிறு,குறு,தொழில்முனைவோரின் தற்போதைய பிரதான கோரிக்கையாக வங்கிக் கடன்களுக்கு வரும் ஆறு மாத வட்டி தள்ளுபடி , வங்கி கடன் தவணைகளை திருப்பி செலுத்துவதிலிருந்து ஆறுமாத விலக்கு ஆகியவையே உள்ளன. இந்த நியாயமான மற்றும் குறைந்தபட்ச கோரிக்கையை மத்திய நிதியமைச்சர் போர்க்கால அடிப்படையில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.