“2 கிலோ தங்கமெல்லா பத்தாது“ : வரதட்சணை புகாரில் சிக்கிய ராசிக்கல் கல்பனா!!

19 September 2020, 2:33 pm
Cbe Dowry Issue - updatenews360
Quick Share

கோவை : வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கோவை காந்திபுரம் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவையில் வரதட்சணை கேட்டு பெண்ணை துன்புறுத்திய புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோவை மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்த ரங்கராஜ் என்பவரின் மகள் அன்னபூரணி(வயது 23). இவருக்கும் கோவை செல்வபுரம் ராமமூர்த்தி ரோடு அருள் கார்டன் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், கல்பனா ஆகியோரின் மகன் ரித்தீசுக்கும் (வயது 23)  கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெற்றது. தொடர்ந்து எட்டாம் தேதி கோவையில் திருமண வரவேற்பும் நடைபெற்றது.

ரித்தீஷின் பெற்றோர் பஞ்சரத்தின ஜெம்ஸ் என்ற என்ற பெயரில் ராசி கற்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகின்றனர். திருமணத்தின் போது வரதட்சணையாக 2 கிலோ தங்க நகை , 58 கிலோ வெள்ளி பொருட்கள், 66 காரட் வைர நகைகள் மற்றும் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுப் பொருட்கள் , வீட்டு உபயோகப் பொருள்கள் மற்றும் ஆடை ஆபரணங்கள் என பல லட்ச ரூபாய்க்கு மாப்பிள்ளை வீட்டாருக்கு அன்னபூரணி குடும்பத்தாரால் வழங்கப்பட்டது.

ஆனால் திருமணம் முடிந்து மூன்று மாதத்தில் அன்னபூரணி இடம் ரித்தீஷின் பெற்றோர் மேலும் நகை, பணம், வீடு ,கார் போன்றவற்றை வரதட்சணையாக வாங்கி வா என கூறி அடித்து துன்புறுத்தியுள்ளனர். மேலும் உணவு வழங்காமல் கொடுமையும் செய்திருக்கின்றனர்.

வரதட்சணை வாங்கி வராவிட்டால் விவாகரத்து செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். தொடர்ந்து ரித்தீஷ் குடும்பத்தார் அன்னபூரணிக்கு உடல்நிலை சரியில்லை என்று சித்த மருத்துவத்தில் சிகிச்சை எடுக்க செய்தனர். இதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு அன்னபூரணிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்த அன்னபூரணிக்கு உடல்நிலையில் பிரச்சினை இருப்பதாக கூறி அன்னபூரணியின் பெற்றோரிடம்  சென்னைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் கடந்த ஏப்ரல் மாதம் பத்தாம் தேதி சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அன்னபூரணி மீண்டும் கணவர் வீட்டிற்கு அழைக்கப்படாமல் இருக்கவே அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அன்னபூரணியின் பெற்றோர் ரித்தீஷின் பெற்றோர் மற்றும் ரித்தீஷ் இடம் கேட்டபொழுது சரியான பதில் அளிக்காமல் இருந்துள்ளனர்.

இதையடுத்து கடந்த மே  8ஆம் தேதி அன்னபூரணி கோவைக்கு வந்து கணவரின் வீட்டிற்கு சென்றிருக்கிறார் . அப்போது ரித்தீஷின் தாய் கல்பனா மற்றும் தந்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் அவரை விரட்டி அனுப்பிவிட்டனர்.தொடர்ந்து  அன்னபூரணி கணவருடன் சேர்ந்து வாழ கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதையறிந்த ரித்தீஷ் மற்றும் அவரது குடும்பத்தார் கேட்கும் வரதட்சணையை கொடுக்காவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என்றும் ஏற்கனவே வழங்கியதைப் போல இருமடங்கு பொருள்களும் ஒரு கோடி மதிப்பிலான கார், 2 கோடி மதிப்புள்ள வீடு வாங்கி தர வேண்டும் என்று அன்னபூரணியை நிர்ப்பந்தித்தனர்.

மேலும் கேட்ட வரதட்சணையை கொடுக்காமல் புகார் கொடுத்தால் அன்னபூரணி யையும் பெற்றோரையும் உயிருடன் விடமாட்டேன் என்றும் தங்களுக்கு மிகப்பெரிய அரசியல் பலம் இருப்பதாகவும் அன்னபூரணியை மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன அன்னபூரணி கோவை கூடுதல் மகிளா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி புகாரின் பெயரில் வழக்கு பதிவு செய்ய கோவை ஆர்எஸ் புரம் அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பிரபா தேவிக்கு உத்தரவிட்டார். இதுகுறித்து அன்னபூரணி யிடம் விசாரணை நடத்திய இன்ஸ்பெக்டர் பிரபா தேவி வரதட்சணை கேட்டு மிரட்டியதாக ரித்தீஷ் அவரது தாய் கல்பனா மற்றும் தந்தை ஸ்ரீகாந்த் ஆகியோர் மீது 498ஏ, 323, 506(2) ஆகிய குற்றவியல் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

பல கோடி ரூபாய் வரதட்சணை கேட்டு பெண்ணை மிரட்டி துன்புறுத்திய சம்பவத்தில் நீதிமன்றம் தலையிட்டு வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு இருப்பது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் வரதட்சணை கேட்டு கொடுமைபடுத்தியதாக கோவை காந்திபுரம் பகுதியில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Views: - 6

0

0