அன்னூர் பைனான்சியர் கொலை வழக்கு… மேலும் ஒருவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது… ஒரே மாதத்தில் 4 பேருக்கு குண்டாஸ்!!

Author: Babu Lakshmanan
22 April 2022, 12:43 pm
Quick Share

கோவை அன்னூர் பைனான்சியர் கொலை வழக்கில் ஏற்கனவே மூவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், 4வது நபரான ராஜராஜன் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது

கோவை மாவட்டம் அன்னூர் நாகம்மா புதூர் பகுதியை சேர்ந்தவர் சரவண சுந்தரம்(19). இவர் இந்து முண்ணனியின் மாவட்ட செயலாளர் குட்டி என்கிற ராஜேந்திரனிடம் பைனான்ஸ் தொழிலில் வேலை பார்த்து வந்தார். பின்னர், அவரிடம் இருந்து பிரிந்து வந்து கடந்த சில மாதங்களாக தனியாக பைனான்ஸ் தொழில் செய்து வந்துள்ளார்.

சரவண சுந்தரம் சமீபத்தில் இந்து முன்னணி அமைப்பில் இருந்தும் விலகி திமுகவில் சேர்ந்துள்ளார். இந்நிலையில் இவருக்கும், ஆட்டோ ஓட்டுநரான பகவான் என்ற தமிழ்செல்வனுக்கும் பணம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கடந்த ஜனவரி மாதம் 27 ஆம் தேதி சரவண சுந்தரம் மைல்கல் பகுதியில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, பகவான் என்ற தமிழ்ச்செல்வனும்,அவரது நண்பரான ராஜராஜனும் தாங்கள் தான் கொலை செய்ததாக அன்னூர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.

சரவணசுந்தரத்திற்கும், ஆட்டோ ஓட்டுநரான பகவான் என்ற தமிழ்ச்செல்வனுக்கும் இடையே இருந்த கொடுக்கல்,வாங்கல் பிரச்சினையை பயன்படுத்தி இந்து முன்னணியின் வடக்கு மாவட்ட செயலாளர் குட்டி என்ற ராஜேந்திரனும், அவரது பார்ட்னரான ரங்கநாதனும் சண்முகசுந்தரத்தை கொலை செய்தது தெரியவந்ததை அடுத்து நால்வரையும் கைது செய்த அன்னூர் போலீசார் அவர்கள் மீது கொலை,கூட்டுசதி செய்தல் என இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கோவை மத்திய சிறையிலடைத்தனர்.

ஏற்கனவே சிறையில் உள்ள இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் குட்டி என்ற ராஜேந்திரன், ஆட்டோ ஓட்டுநர் பகவான், குட்டியின் பார்ட்னரான ரங்கதாதன் உள்ளிட்டோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோவை எஸ்.பி.பத்ரி நாராயணன் பரிந்துரையின் பேரில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களை குண்டர் சட்டத்தில் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.

இந்நிலையில் ஏற்கனவே அன்னூர் பைனான்சியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மூவர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்துள்ள நிலையில், ஆட்டோ ஓட்டுநரின் நண்பரான ராஜராஜன் மீதும் தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
பைனான்சியர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நால்வர் மீதும் ஒரே மாதத்தில் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 694

0

0