ஃபாரின் விநாயகர் கோவிலில் களைகட்டிய கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு பூஜிக்கப்பட்ட துளசி செடி விநியோகம்..!!
Author: Babu Lakshmanan23 August 2021, 9:45 am
கோவை உப்பிலிபாளையம் எல்.ராமசாமி நகர் ஃபாரின் விநாயகர் கோவில் வளாகத்தில் புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ அகத்திய மகரிஷி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
கோவை,காமராஜர் ரோடு,எல்.ராமசாமி நகர் பகுதியில் அமைந்துள்ளது வரசித்தி விநாயகர் மற்றும் ராம்பக்த அனுமன் கோவில்.அந்த பகுதி மக்களால் ஃபாரின் விநாயகர் என அழைக்கப்படும் இந்த கோவில் வளாகத்தில் சமீபத்தில் புதிதாக அகத்திய மகரிஷி பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேக விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. மங்கள வாத்தியம், விநாயகர் பூஜையுடன், முதல்கால யாக பூஜை தீபாராதையுடன் துவங்கியது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, இரண்டாம் கால பூஜை, நாடி சந்தானம்,யாத்ரதானம், மஹாபூர்ணாவதியை தொடர்ந்து, புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்ட ஸ்ரீ அகத்திய மகரிஷி கருவறை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
தொடர்ந்து புனித நீர் ஊற்றப்பட்டது. ஸ்ரீமது ஞான சுவாமி நாத சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்ற இந்த கும்பாபிஷேக விழாவில், பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். எல்.ராமசாமி நகர் கே.ஜி.கார்டன் வெல்பேர் அசோசியேஷன் மற்றும் அப்பகுதி குடியிருப்பு உரிமையாளர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மூலிகைகளின் தலைவர் ஸ்ரீ அகத்திய மகரிஷி அவர்களது கும்பாபிஷேகத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட துளசி செடி வழங்கப்பட்டது. அகத்தியரின் பூஜையில் வைக்கப்பட்ட துளசி செடியினை பெறும் பக்தர்கள் அவர்களது வீட்டு வாசல் முன்பாக வைத்து பாரமரிக்கும் போது, வீட்டிற்குள் வரும் காற்றில் வீட்டில் உள்ள கிருமிகளையும், எதிர்மறை சக்திகளையும் அகற்றி, வீட்டில் உள்ளோர் அனைவருக்கும் தூய காற்றுடன் தெய்வீக அருள் பெருகும் என விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
0
0