கோவையில் பல லட்சம் மோசடி செய்த தம்பதி : நாம் தமிழர் கட்சி பிரமுகருக்கு வலை வீச்சு!!

21 January 2021, 1:08 pm
Cbe Fraud Couples - Updatenews360
Quick Share

கோவை : கட்டுமானப் பொருள்கள் வாங்கி பல லட்சம் ரூபாய் மோசடி செய்து தலைமறைவாக உள்ள மோசடி இன்ஜினியர் தம்பதியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவை ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்த பிரபல கட்டிட மேஸ்திரி தீனதயாளன் என்பவரின் மகன் அருண்குமார். இவர் மீது கடந்த மாதம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்த அபிநயா என்பவர் கோவில்பாளையம் போலீசில் புகார் அளித்தார்.

அதில் 17 லட்ச ரூபாய் மதிப்புள்ள அலுவலக பொருட்களை வைத்திருந்த குடோனில் இருந்து இன்ஜினியர் அருண் குமார் மற்றும் அவரது மனைவி தீப தர்ஷினி ஆகியோர் இரவு நேரத்தில் பூட்டை உடைத்து திருடி விற்று விட்டதாக புகார் அளித்திருந்தார். புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் போலீசார் இன்ஜினியர் அருண் குமார் மற்றும் அவரது மனைவி தீப தர்ஷினி யை தேடிவந்தனர்.

இந்நிலையில் இன்ஜினியர் அருண் குமார் மற்றும் அவரது மனைவி தீபதர்ஷினி ஆகியோர் மீது கோவில்பாளையம், சிங்காநல்லூர், ராமநாதபுரம் உள்ளிட்ட போலீஸ் ஸ்டேஷன்களில் தொடர்ந்து மோசடி புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

கோவில்பாளையம் போலீசில் சின்ன தடாகம் வீரபாண்டி ரோடை சேர்ந்த ரங்கசாமி என்பவரின் மகன் சுரேஷ்குமார் புகார் அளித்தார். அதில் சுரேஷ்குமார் மற்றும் அவரது நண்பர்கள் சைமன் விக்ரம் அருள்ராஜ் ஆகியோரிடம் இன்ஜினியர் அருண்குமார் மற்றும் தீப தர்ஷினி ஆகியோர் கட்டுமானப் பொருள்களான செங்கல், சிமெண்ட், மணல் ,இரும்பு கம்பிகள் உள்ளிட்டவற்றை வாங்கியுள்ளனர்.

பொருட்களை வாங்கிக்கொண்டு கட்டுமான பணிகள் முடிவடைந்தவுடன் பணம் தருகிறேன் என கூறி சுமார் 60 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுக்காமல் ஏமாற்றி உள்ளனர். இதேபோல கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இன்ஜினியர் அருண்குமார் இடம் வேலை செய்த ஊழியர்களுக்கு பணம் தராததால் ஆத்திரமடைந்த ஊழியர் ஒருவர் ஒண்டிப்புதூர் மேம்பாலத்தில் வைத்து அருண்குமாரை கத்தியால் குத்தினார்.

இதுகுறித்து சிங்காநல்லூர் போலீசார் ஏற்கனவே வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி இன்ஜினியர் அருண் குமார் மற்றும் அவரது மனைவி தீப தர்ஷினி ஆகியோர் கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வீடு கட்ட விரும்பும் நபர்களிடம் மற்ற இன்ஜினியர்களை விட குறைவான கட்டணத்தில் வீடு கட்டித் தருகிறேன் என ஆசைவார்த்தை கூறுவது வழக்கம்.

அதன்பேரில் மற்ற இன்ஜினியர்கள் விட செலவு குறைவாக உள்ளதே என நம்பி இவரிடம் ஏராளமானோர் பல கோடி ரூபாயை கொடுத்து தங்கள் கட்டுமான பணிகளும் முடியாத நிலையில் ஏமாந்த நிலையில் உள்ளனர் .

இந்நிலையில் நண்பரின் குடோனில் உள்ள பொருட்களை எடுத்து திருடி விற்ற சம்பவம் மூலம் இன்ஜினியர் அருண் குமார் மற்றும் அவரது மனைவியின் தீப தர்ஷினியின் மோசடி செயல்கள் அரங்கேறி உள்ளது. இதையடுத்து இன்ஜினியர் அருண்குமார் மற்றும் தீப தர்ஷினி மீது புகார்கள் தற்போது போலீசுக்கு வந்த வண்ணம் உள்ளது.

மேலும் தலைமறைவாக உள்ள இன்ஜினியர் அருண்குமார் நாம் தமிழர் கட்சியில் பொறுப்பாளராக இருந்து வருவதாகவும் கூறப்படுகிறது. தற்போது தலைமறைவாக உள்ள இன்ஜினியர் அருண் குமார் மற்றும் அவரது மனைவி தீப தர்ஷினி யைப் பிடிக்க தனிப்படை போலீஸ் அமைக்கப்பட்டுள்ளது.

Views: - 0

0

0