கிரிக்கெட் கனவு பலிக்குமா?மாற்றத்தை தேடும் மாற்றுத்திறனாளி இளைஞர்!!

Author: Udayachandran
9 October 2020, 7:29 pm
Handicapped Cricketer - Updatenews360
Quick Share

கோவை : பொள்ளாச்சி அருகே ஏழை குடும்பத்தில் பிறந்த மாற்றுத்திறனாளி இளைஞர் கிரிக்கெட் விளையாட்டில் தனித்திறமையை வெளிப்படுத்தி துபாயில் நடைபெறும் டிபிஎல் போட்டியில் பங்கேற்க வசதி இல்லாததால் அரசின் உதவிக்காக காத்திருக்கிறார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள மாமரத்து பட்டி கிராமம். குறைந்த அளவு மக்கள் தொகை கொண்டது. இக்கிராமத்தினர் பெரும்பாலும் விவசாயத்தை நம்பியே இருக்கின்றனர்.

இந்த கிராமத்தை சேர்ந்த 28 வயதான மாற்றுத்திறனாளி இளைஞர் சீனிவாசன், 20 வருடங்களுக்கு முன்பு தாய் தந்தை இறந்து விட்டதால் தனது பாட்டி ரங்கம்மாள் பராமரிப்பில் வளர்ந்து வந்தார்.

கூலி வேலைக்கு சென்று, சீனிவாசன் மற்றும் அவரது சகோதரர் சுரேஷ் இருவரையும் பட்டம் பெறுவதற்காக கடுமையாக உழைத்து படிக்க வைத்துள்ளார் ரங்கம்மாள்.

சிறு வயது முதலே கிரிக்கெட்டின் மீது கொண்ட தீராத காதலால், ஒரு கையில் தென்னை மட்டையில் பந்து விளையாடி தற்போது தமிழகத்தின் மாற்றுத்திறனாளி அணியில் விளையாடி வருகிறார். இரு கை இருந்தாலே கிரிக்கெட் விளையாடுவது என்பது சிரமமான காரியம் என்றாலும் ஒரு கையால் கிரிக்கெட் தனி முத்திரை பதித்து வருகிறார் மாற்றுத்திறனாளி இளைஞர் சீனிவாசன்.

பாட்டியின் உழைப்பை நினைத்து பொறியியலில் பட்டம் பெற்றுள்ளார் சீனிவாசன். மேலும் பள்ளி, கல்லூரிகளில் கிரிக்கெட் போட்டிகளில் பங்குபெற்று பல பரிசுகளை பெற்றுள்ளார். தமிழக அணிக்காக தேசியளவில் நடைபெறும் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடியுள்ளார்.

இதுவரை 100 க்கும் மேற்பட்ட போட்டிகளில் விளையாடியுள்ள சீனிவாசன் மாற்றுத்திறனாளிகளுக்காக துபாயில் அடுத்த மாதம் நடைபெறும் டிபிஎல் போட்டியில் விளையாட சென்னை ஸ்டார்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

தனித் திறமையை கொண்டு சாதிக்க வேண்டுமென்றால் விடா முயற்சியும், தன்னம்பிக்கை மட்டும் போதாது என்பதால் வசதியும் வேண்டும் என்று தெரிந்து கொண்ட சீனிவாசன், வசதி வாய்ப்புகள் இல்லாததால், தனது உழைப்பு வீணாகி விடுமோ, என்ற அச்சத்தில் இருக்கிறார்.

50 ஆயிரம் ரூபாய் இருந்தால் போதும், தனது கனவு நனவாகும் என கண்கள் கலங்கியபடி கூறும் கூலித் தொழிலாளியின் பேரனுக்கு, துபாய் சென்று வர ஆகும் செலவை, ஏற்றுக்கொள்ள தமிழக அரசு மற்றும் தனியார் அமைப்பினர் முன் வருவார்களா என எதிர்பார்த்து காத்திருக்கிறார்.

விடாமுயற்சியால் பல மாற்றுத்திறனாளிகள் தங்கள் வாழ்க்கையை மாற்றி காட்டும் திறனாளிகளாக வலம் வரும் சூழலில் மாற்றுத்திறனாளி இளைஞர் சீனிவாசனின் வாழ்க்கையில் மாற்றும் ஏற்படுமா என்பதை பொறுத்திருந்தது தான் பார்க்க வேண்டும்.

Views: - 66

0

0