கனமழை எதிரொலி : மேட்டுப்பாளையம் அருகே பாலம் வெள்ளத்தில் மூழ்கியது.!!
8 August 2020, 12:31 pmகோவை : பில்லூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரித்து வருவதால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு லிங்காபுரம் உயர்மட்ட பாலம் மூழ்கியது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள பில்லூர் அணையானது கடந்த ஒருவார காலமாக பெய்து வரும் தொடர் தென்மேற்கு பருவமழையால் நிரம்பி நான்காவது நாளாக தண்ணீர் திறக்கபட்டுள்ளது
10,000 கன அடி முதல் 32,000 கன அடிவரை தண்ணீர் உபரியாக பவானி ஆற்றில் திறக்கபட்டு வருவதால் அந்த தண்ணீர் பவானி சாகர் அணையை சென்றடைகிறது.
இதனால் அந்த அணையின் நீர் மட்டமும் மளமளவென உயர்ந்து தற்போது 95அடியை எட்டியதால் அதன் நீர் தேக்கபகுதியில் அமைந்துள்ள சிறுமுகை அருகே உள்ள காந்தவயல் லிங்காபுரம் பகுதியினை இணைக்கும் பாலம் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளது.
30 அடி உயரம் கொண்ட அந்த பாலம் முழுவதும் மூடபட்டு அதற்கும் மேல் தண்ணீரானது தேங்கி வருவதால் அங்குள்ள கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமடைந்துள்ளனர். காந்தவயல், ஆளூர், உளியூர் கிராமங்களை லிங்காபுரம் பகுதியுடன் இணைக்கும் இந்த பாலம் தற்போது நான்கு புறங்களும் தண்ணீரால் சூழபட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்களை கூட எடுத்து செல்வது மிக கடிணம் என்ற சூழலுக்கு தள்ளபட்டுள்ள இந்த கிராம மக்கள் ஒவ்வொரு பருவமழையின் போதும் தீவில் வாழ்வது போல உள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர். 5 ஆயிரம் ஏக்கர் விவசாயம் நடைபெறும் இந்த பகுதியில் விவசாய விளைப்பொருட்களையும் எடுத்து செல்ல முடியாத நிலை உள்ளதால் விரைந்து அரசு பாலம் கட்டிதர உரிய நடவடிக்கை எடுக்க வேணடும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.