கார் பார்க்கிங் பிரச்சனைக்கு இனி தீர்வு… கோவையில் அதிநவீன மல்டிலெவல் கார் பார்க்கிங் விரைவில் அறிமுகம்..!!!

22 January 2021, 1:49 pm
Quick Share

சென்னைக்கு அடுத்தபடியாக மக்கள் தொகை எண்ணிக்கை மற்றும் வாகன பயன்பாடு அதிகம் காணப்படுவது கோவையில்தான். நாள்தோறும் லட்சக்கணக்கான வாகனங்கள் கோவை மாநகரின் உள்ளேயும், வெளியேயும் வந்து செல்கின்றன. இதனால், சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டும் பணிகள் நடந்து வருகின்றன.

இதனிடையே, கோவை மாநகரில் வணிக வளாகங்களுக்கு செல்பவர்களுக்கு போதிய வாகன பார்க்கிங் வசதியில்லாது பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தி வருவது நமக்கு தெரிந்த ஒன்றுதான். பொதுமக்களும் பார்க்கிங் வசதியில்லாமல், வெகு தூரத்திற்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, வணிக வளாகங்கள் அல்லது கடைகளுக்கு சென்று வருவது பெரும் சிரமத்தை ஏற்படுத்தி வந்தது.

எனவே, முக்கிய பகுதிகளில் வாகன பார்க்கிங் வசதியை ஏற்படுத்தி தருமாறு தமிழக அரசுக்கும், கோவை மாவட்ட நிர்வாகத்திற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், முதற்கட்டமாக கோவை ஆர்எஸ் புரத்தில் உள்ள டிபி சாலையில் அதிநவீன வசதி கொண்ட மல்டிலெவல் கார் பார்க்கிங் அமைக்கப்பட இருக்கிறது. இந்த பார்க்கிங்கில் ஒரே நேரத்தில் 370 வாகனங்களை நிறுத்த முடியும். மேலும், வெறும் 90 வினாடிகளில் வாகனத்தை அதன் உரிமையாளரிடம் ஒப்படைப்பதற்கான வசதிகளும் செய்யப்படவிருக்கிறது. இது கோவை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என நம்பப்படுகிறது.

வாகனங்களை நிறுத்த முடியாமல் அவதிப்படுபவர்களின் சிரமத்தை போக்க அமைச்சர் எஸ்பி வேலுமணியின் பரிந்துரையினால், இந்த மல்டிலெவல் பார்க்கிங்கை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்மூலம் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளதால், கோவை மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Views: - 0

0

0