பாழடைந்த வீடுகளை மாற்றி தருமாறு கோரிக்கை..

6 December 2019, 4:00 pm
coimbator karthik mla UpdateNews360
Quick Share

கோவை : சிங்காநல்லூர் பகுதியில் பாழடந்துள்ள ஹவுசிங் யூனிட் குடியிருப்பு வீடுகள் அகற்றி விட்டு புதிய வீடுகள் கட்டித்தரக்கோரி கோவை மாநகர் மாவட்டப் பொறுப்பாளர் நா.கார்த்திக் எம் எல் ஏ அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கோவை மாநகராட்சி சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட 64 வது வட்டம், உழவர் சந்தை அருகில் உள்ள ஹவுசிங் யூனிட் பகுதியில் 17.55 ஏக்கர் பரப்பளவில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் 960 அடுக்கு மாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இந்த குடியிருப்பில் உள்ள வீடுகளை கட்டி 35 வருடங்கள் தான் ஆகிறது.

ஆனால் தற்பொழுது இந்த வீடுகள் அனைத்தும் சிதிலமடைந்து , பாழடைந்து எப்பொழுது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த வீடுகளில் மக்கள் யாரும் குடியிருக்க முடியாத, வாழ முடியாத சூழ்நிலை ஏற்பட்டு தங்கள் வாழ்வாதாரத்தையே இழந்துள்ளனர். அங்கே வசிக்கும் மக்கள் அனைவரும் வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்கள் ஆவார்கள்.

ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் இந்த மக்களுக்கு அதே பகுதியில் மாற்று இடங்களில் தற்காலிகமாக வீடுகள் ஒதுக்கி தங்குவதற்குண்டான ஏற்பாடுகளையும் , இது மட்டுமின்றி பழைய சிதிலமடைந்துள்ள வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிய தரமான வீடுகள் கட்டி அதே மக்களுக்கு வழங்குவதற்கும் இந்த அரசும், வீட்டு வசதி வாரியமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிக்கையில் கூறியுள்ளார்.