‘ஸ்பாட்-ல தான் நாங்க இருக்கோம்’… சுற்றுச்சுவர் இடிந்த சம்பவம்.. கல்லூரி நிர்வாகம் அலட்சியப்படுத்துவதாக மேயர் புகார்..!!

Author: Babu Lakshmanan
5 July 2023, 8:24 am
Quick Share

மதில் சுவர் இடிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட்ட விவகாரம் தொடர்பாக மேயர் கல்லூரி நிர்வாக அறங்காவலரிடம் செல்போன் மூலம் தொடர்பு கொண்டபோது முறையான பதில் அளிக்காமல் போனை துண்டித்ததாக மேயர் கல்பனா குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் சுகுணாபுரத்தில் கல்லூரி மதில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்து தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மேயர் கல்லூரி நிர்வாக அறங்காவலர் மலர்விழியை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட போது, முறையாக பதிலளிக்காமல் செல்போனை துண்டித்ததாக மேயர் குற்றச்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து மேயர் கல்பனா செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது ;- கல்லூரி நிர்வாக தரப்பில் இருந்து சம்பவ இடத்திற்கு யாரும் வரவில்லை. அவர்கள் காண்ட்ராக்ட்காரர்கள் தான் பொறுப்பு என தெரிவிக்கின்றனர். அனுமதியில்லாமல் கட்டியிருந்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம். இதுவரை யாரும் வரவில்லை. போனை துண்டிக்கிறார்கள். அதிகாரிகள் நாளை ஆய்வு செய்து தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

கண்டிப்பாக நிர்வாகம் பதில் சொல்லியாக வேண்டும். நான்கு உயிர் பலியாகியுள்ளது. காவல்துறையிடம் சொல்லி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அலட்சியமாக இருக்கிறார்கள்.

நிர்வாகத்தின் மீது மாநகராட்சி சார்பாக தக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாநகராட்சி ஆணையாளர், ஆட்சியரிடம் தெரிவித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவை மாநகராட்சி சார்பிலும் காவல்துறையில் புகார் அளிக்கப்படும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Views: - 197

0

0