மருந்துக் கடைக்கு வந்த மவுசு..!! (வீடியோ)

26 March 2020, 5:35 pm
cbe Medical Shop Crowd-Updatenews360
Quick Share

கோவை : கோவையில் மளிகை கடைகளை விட மருந்துக்கடையில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

நாடு முழுவதும் கொரானாவின் பாதிப்பிலிருந்து பொது மக்களை காக்கும் நோக்கில் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்தப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களான மளிகை, காய்கறிகள் மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவை துடியலூர், கவுண்டம்பாளையம், பெரியநாயக்கன்பாளையம,நரசிம்மநாயக்கன்பாளையம், ஜி என் மில்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை பொருட்கள் மற்றும் மருந்துகளை வாங்க பொதுமக்கள் வீட்டிலிருந்து படையெடுக்க தொடங்கியுள்ளனர். அங்குள்ள மளிகை கடைகளை விட மருந்து கடைகள் முன்பாக மருந்து வாங்க நூற்றுக்கணக்கான பேர் வரிசையில் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஒவ்வொருவருக்கும் இடையில் ஒரு மீட்டர் இடைவெளியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வரிசையில் காத்து கிடக்கின்றனர். ஒவ்வொருவரும் மருந்து வாங்கிச் செல்ல சுமார் மூன்று மணிநேரம் ஆவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதனிடையே ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருந்தாலும் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமாகவே காணப்படுகிறது. கார் மற்றும் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி என்ன காரணத்திற்காக செல்கிறார்கள் என்பதும் அதற்கான ஆதாரங்கள் உள்ளதா என்பதையும் பரிசோதித்து அனுப்பி வருகின்றனர்.

பாதுகாப்பில் ஈடுபட்டு வரும் காவலர்களுக்கு பல்வேறு சமூக நல ஆர்வலர்கள் தண்ணீர், பழம், பிஸ்கட் மற்றும் உணவுகளை கொடுத்து வருகின்றனர். கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் வி சி ஆறுக்குட்டி தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவலர்களுக்கு 21 நாட்களும் மோர் பாக்கெட்டுகளை வழங்கி வருகிறார். அதேபோல் காய்கறி கடைகள் முன்பாக ஆறு கோடுகள் அமைத்து ஒரு மீட்டர் இடைவெளியில் ஆட்களை நிறுத்தி ஒவ்வொருவராக உள்ளே அனுமதிக்க வேண்டும் என போலீசார் ஒலிபெருக்கி மூலம் கடைகளுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.