அவமதித்தவருக்கு வெகுமானம்.! காவி சாயம் பூசியவரின் குடும்பத்திற்கு காசோலை.!!
9 August 2020, 4:01 pmகோவை : பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றிய விவகாரத்தில் சரணடைந்த இளைஞரின் குடும்பத்திற்கு பாஜக சார்பில் ஐம்பதாயிரம் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 17ஆம் தேதி, கோவை சுந்தராபுரம் பகுதியில் பெரியார் சிலை மீது காவிச்சாயம் ஊற்றப்பட்டது. இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். திக, திமுக தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இச்சம்பவம் குறித்து குனியமுத்தூர் காவல் துறையினர் 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், போத்தனூர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த பாரத் சேனா அமைப்பின் தெற்கு மாவட்ட அமைப்பாளர் அருண் கிருஷ்ணன் (வயது 21) போத்தனூர் காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.
இதனையடுத்து கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட அருண் கிருஷ்ணனை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் உத்தரவிட்டார்.
இதனிடையே தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட அருண் கிருஷ்ணன் குடும்பத்திற்கு, பாஜக தொழில்நுட்ப பிரிவு சார்பாக ரூ.50 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது. அருண் கிருண்ஷன் பெற்றோரிடம் பாஜகவினர் வழங்கினர்.