சினிமாவை மிஞ்சிய நெடுஞ்சாலை கொள்ளையர்களின் திருட்டு… பேருந்தை பைக்கில் துரத்தி வந்து லக்கேஜை திருடிய ஒடிசா கும்பல் ; பதற வைக்கும் வீடியோ

Author: Babu Lakshmanan
10 June 2023, 11:50 am

கோவை ; ஒடிசாவில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு இடையே உள்ள சாலையில் சென்ற கோவையைச் சேர்ந்த ஆன்மீக சுற்றுலாப் பயணிகளின் உடமைகளை பைக்கில் வந்தவர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த வாகராயம்பாளையம் புதூர் மற்றும் சந்திராபுரம் அதன் சுற்று வட்டார பகுதிகளை சார்ந்த 50க்கும் மேற்பட்டோர் கடந்த 28ம் தேதி 18 நாள் ஆன்மீக பயணமாக வட மாநிலங்களில் உள்ள காசி, சாய்பாபா கோவில் உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு தனியார் சுற்றுலா பேருந்தில் சென்றுள்ளனர்.

பின்னர் காசி உள்ளிட்ட ஆன்மீக தளங்களுக்கு சென்று விட்டு 7ம் தேதி இரவு ஒடிசாவில் இருந்து குஜராத்தில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளனர். இரவு உணவை முடித்து விட்டு அனைவரும் பேருந்தில் வந்துகொண்டிருந்த போது அதிகாலை 4 மணி அளவில் குஜராத்திற்கு வந்து தங்கும் விடுதி அருகே நின்ற போது, பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டிருந்த உடமைகள் குறைந்து காணப்பட்டதால் சந்தேகம் அடைந்த ஓட்டுனர், உதவியாளர் பேருந்தின் மீது ஏறி உடமைகளை சரி பார்த்தபோது சிலரின் உடமைகள் காணாமல் போனது தெரியவந்தது.

இதனையடுத்து, பேருந்தின் பின்பக்கம் பொருத்தி இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, அதிகாலை 2 மணி அளவில் தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருக்கும் போது, பேருந்தின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரில் ஒருவன் ஓடும் பேருந்தில் தாவி ஏறுவதும், பேருந்தின் மேல் பகுதியில் வைக்கப்பட்டுள்ள உடைமைகளை கீழே வீசுவதும் பதிவாகி இருந்தது அத்துடன் ஓடும் பேருந்தில் இருந்து இரு சக்கர வாகனத்திற்கு மாறும் காட்சிகளும் பதிவாகி இருந்தது தெரிய வந்தது.

இது குறித்து சுற்றுலா சென்றுள்ள சந்திராபுரம் பகுதியைச் சேர்ந்த பயணி ஒருவர் தகவலாக கூறியதாவது ;- கடந்த ஞாயிற்றுக்கிழமை 18 நாள் ஆன்மீக சுற்றுலாவாக வட மாநிலங்களுக்கு சென்றோம். காசி, உள்ளிட்ட கோவில்களுக்கு சென்று விட்டு ஒரிசாவில் இருந்து குஜராத் மாநிலத்தில் சென்றபோது, இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. அதிகாலை நேரம் என்பதால் அனைவரும் தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர், எங்களுடன் வந்திருந்த 10 பேரின் உடைமைகளை கொள்ளையடித்துள்ளனர்.

குஜராத்தை அடைந்ததும் தங்கு விடுக்கு சென்ற போது இந்த சம்பவம் தெரிய வந்தது. மேலும் துணிகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த 25 ஆயிரம் ரூபாய் பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக பணம் மற்றும் பொருட்கள் பெருந்தின் உள் பகுதியில் வைத்ததால் அவை தப்பியது. சினிமாவில் தான் இது போன்ற காட்சிகளை பார்த்திருக்கிறோம். தற்போது நாங்கள் சென்ற பேருந்தில் இந்த சம்பவம் நடந்தது அதிர்ச்சியில் ஏற்படுத்தி உள்ளது.

வட மாநிலங்களுக்கு சுற்றுலா செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என தெரிவித்தார்.வழக்கமாக வட மாநிலங்களுக்கு சரக்கு ஏற்றிச் செல்லும் லாரிகளை குறி வைத்து ஓடும் லாரியில் ஏறி கொள்ளை அடிக்கும் சம்பவங்கள் நடைபெறும் நிலையில் சுற்றுலா சென்ற பேருந்தில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!