மொழிப்போர் தியாகிகள் தினம்: கோவையில் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுகவினர் மலர்தூவி மரியாதை..!!
Author: Rajesh25 ஜனவரி 2022, 1:08 மணி
கோவை: இந்தித் திணிப்புக்கு எதிராகப் போராடி உயிர்நீத்த மொழிப்போர் தியாகிகளுக்கு அதிமுக தொடர்ந்து மரியாதை செலுத்தி வருவதாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இந்தி எதிர்ப்புக்கு எதிராக போராடி வீரமரணம் அடைந்தவர்களை நினைவு கூறும் விதமாக ஆண்டு தோறும் ஜனவரி 25ம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, மொழிப்போர் தியாகிகள் தினமான இன்று கோவை அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில், தியாகிகளுக்கு மலர் தூவி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது, கோவையில் அதிமுக சார்பாக இன்று மொழிப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்பட்டது. தொடர்ந்து அ.தி.மு.க தான் தமிழ் மொழிக்காக தன்னுயிரை இழந்து வீர மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு உரிய மரியாதை அளித்துக் கொண்டிருக்கிறது.
மொழிப்போரில் கோவை மாவட்டம் முக்கியமான பங்காற்றியுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அந்த காலகட்டத்தில் துப்பாக்கிச்சூடு மற்றும் தீக்கிரையாகியுள்ளனர் என்றார்.
இதனைதொடர்ந்து கவுண்டம்பாளையம் தொகுதி எம்.எல்.ஏ பி.ஆர்.பி அருண் குமார் கூறுகையில், “பெரியநாயக்கன் பாளையம் அதிமுக ஒன்றிய செயலாளர் வீட்டில் அரசியல் ஆதாயத்திற்காக ரெய்டு நடத்தியுள்ளனர். தேர்தல் நெருங்கும் நேரத்தில் வேலை கிடைக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செயல்படுகின்றது திமுக அரசு.
முதலில் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் வீடுகளில் ரெய்டு நடத்தினர். தற்போது ஒன்றிய செயலாளர் வரை ரெய்டு நடத்த தொடங்கியுள்ளனர். இந்த வழக்குகளுக்கு நாங்கள் அஞ்ச மாட்டோம் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.,க்கள் அம்மன் அர்ஜூனன், ஏ.கே செல்வராஜ், சூலூர் கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம், புறநகர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட அதிமுக.,வினர் கலந்து கொண்டனர்
0
0