மழை சேதங்கள் குறித்து அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு: நரிக்குறவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என உறுதி
Author: kavin kumar21 November 2021, 4:27 pm
விழுப்புரம்: திருக்கோவிலூர் பகுதியில் மழை சேதங்கள் குறித்து அமைச்சர் பொன்முடி நேரில் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மணம்பூண்டி ஓம்சக்தி நகரில், கடந்த 2 நாட்களுக்கு முன்னர் பெய்த கனமழையின் காரணமாக 70க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் புகுந்த நீர் நேற்று வடிந்த நிலையில், இன்று திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினரும் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சருமான க.பொன்முடி நேரில் ஆய்வு மேற்கொண்டு வீட்டின் உரிமையாளர்களுக்கு ஆறுதல் கூறினார்.
இதனைத் தொடர்ந்து முகையூர் பகுதியில் பரணூர் சாலையில் உள்ள நரிக்குறவர்கள் குடிசையை பார்வையிட்டு அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார். மேலும், அவர்களுக்கு வசிக்கும் இடத்திற்கு பட்டா வழங்கவும், அதில் வீடு கட்டி கொடுக்கவும் அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடி,வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உணவின்றி தவித்த நரிக்குறவர்கள் முதற்கட்டமாக நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. மேலும், அதேபோல் வீடு கட்டித்தர வேண்டும் என அவர்களின் பிரதான கோரிக்கையை ஏற்று முதல்வரின் உத்தரவின் படி, அவர்களுக்கு வீடு கட்டித்தரப்படும் என கூறினார்.
0
0