திமுகவின் கையை உதறிய காங்கிரஸ் : தனித்து போட்டியிட காங்கிரஸ் முடிவு..!!
20 January 2021, 12:48 pmகூட்டணியில் விரிசல் ஏற்பட்ட நிலையில், புதுச்சேரியில் தனித்துப் போட்டியிடவும் தயார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. தற்போது, முதலமைச்சராக நாராயணசாமி இருந்து வருகிறார். இதனிடையே, இரு கட்சியினரிடையே ஏற்பட்டுள்ள மனக்கசப்பினால், கூட்டணியில் சுமூகமான உறவு இல்லை. காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தில் முதலமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்ட நிலையிலும், திமுகவினர் பங்கேற்க வில்லை. இது காங்கிரஸ் கட்சியினருக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில், வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவோம் என்றும், திமுக எம்பி ஜெகத்ரட்சகன் முதலமைச்சராக வருவார் என்றும் மாநில திமுகவினர் அறிவித்தனர். இது காங்கிரஸ் தலைவர்களிடையே உச்சகட்ட கோபத்தை ஏற்படுத்தியது. இதனால், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் இந்தக் கூட்டணி நீடிப்பது கேள்விக்குறியாகியுள்ளது.
இந்த நிலையில், திருப்பூருக்கு சென்றிருந்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது :- திமுக – காங்கிரஸ் கூட்டணி இடையே எந்தக் குழப்பமும் இல்லை. தற்போது உள்ள கருத்து வேறுபாடுகளை, பேசி தீர்த்துக் கொள்வோம். புதுச்சேரியை பொறுத்தவரையில் அந்த மாநில தலைவர்கள்தான் இதுபற்றி கருத்துக்களை தெரிவிக்க முடியும்.
ஒருவேளை வாய்ப்பு இல்லையெனில், தனித்து போட்டியிடவும் தயாராகவே இருக்கிறோம். அதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை, எனத் தெரிவித்தார்.
0
0