தஞ்சையில் கல்லூரி மாணவிக்கு கொரோனா உறுதி: ஆசிரியர்கள் உள்பட சக மாணவர்களுக்கு பரிசோதனை!!

Author: Aarthi Sivakumar
4 September 2021, 4:12 pm
Quick Share

தஞ்சாவூர்: தஞ்சையில் 3ஆம் ஆண்டு கல்லூரி மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் தமிழக அரசு அறிவிப்பின்படி பள்ளி கல்லூரிகள் கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கையாக பள்ளி, கல்லூரிகளில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கல்லூரிகள் திறக்கப்பட்ட நாளன்று தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரியில் 914 மாணவிகள், 24 ஆசிரியர்கள் என 948 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. மேலும் தொடர்ந்து கல்லூரியில் தடுப்பூசி போடக்கூடிய பணியும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பரிசோதனை செய்த மாணவிகளில் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

முன்னதாக இந்த மாணவி முதல் தவணை தடுப்பூசி செலுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைத்தொடர்ந்து பள்ளி, கல்லூரிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் காய்ச்சல் அறிகுறியுடன் பள்ளி, கல்லூரிகளுக்கு வரவேண்டாம் என்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Views: - 230

1

0