கோவையில் 322 பேருக்கு கொரோனா ..! முழு விவரம்
25 August 2020, 7:18 pmகோவை: கோவையில் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றிய 11 வடமாநிலத் தொழிலாளர்கள் உள்பட 322 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்டம், எஸ்.எஸ்.குளம் பகுதியில் செயல்பட்டு வரும் பம்ப் உற்பத்தி நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒருவருக்கு அண்மையில் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் 50க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 11 வட மாநிலத் தொழிலாளர்களுக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பம்ப் உற்பத்தி நிறுவனம் தற்காலிகமாக அடைக்கப்பட்டது. தவிர மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையை சேர்ந்த 35 வயது ஆண் பாதுகாவலர், கணபதி காவலர் குடியிருப்பை சேர்ந்த 44 வயது ஆண் ஆகியோருக்கும் கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர மேட்டுப்பாளையத்தில் 14 பேர், ஆர்.எஸ்.புரத்தில் 12 பேர், பி.என்.பாளையம், சூலூரில் தலா 10 பேர், பீளமேடு, மதுக்கரையில் தலா 8 பேர், கணபதியில் 5 பேர் உள்பட 322 பேருக்கு இன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 467 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கோவையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 8 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை கோவையில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 252ஆக உயர்ந்துள்ளது.