திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ,வுக்கு கொரோனா : தனியார் மருத்துவமனையில் அனுமதி

Author: kavin kumar
13 January 2022, 10:01 pm
Quick Share

திருப்பூர்: திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. செல்வராஜூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

திருப்பூர் வடக்கு தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏவான கே.என்.விஜயகுமாருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருப்பூர் தெற்கு தொகுதி தி.மு.க. எம்.எல்.வாக இருந்து வருபவர் செல்வராஜ் (வயது 65 ). இவர் திருப்பூர் கொங்கு மெயின்ரோடு பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் செல்வராஜ் எம்.எல்.ஏவிற்கு இன்று சளி மற்றும் இருமல் இருந்தது. இதன் காரணமாக சந்தேகமடைந்த அவர் திருப்பூர் அவினாசி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று கொரோனா பரிசோதனை செய்தார். பரிசோதனை முடிவுகள் வரும் வரை தன்னை அவர் தனிமைப்படுத்திக்கொண்டார்.

இதற்கிடையே இந்த பரிசோதனை முடிவுகள் மாலை வந்தது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ.விற்கு லேசான கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும், செல்வராஜ் எம்.எல்.ஏ. அரசு விழாக்கள் மற்றும் கட்சி விழாக்களில் கடந்த 2 நாட்கள் பங்கேற்றதால், தன்னுடன் பணியாற்றியவர்களை கொரோனா பரிசோதனை செய்யுமாறும் அறிவுறுத்தியுள்ளார். திருப்பூரில் ஏற்கனவே ஒரு எம்.எல்.ஏ.விற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது மேலும் ஒரு எம்.எல்.ஏ.வுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Views: - 502

0

0