உணவகம் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு : பைக்கில் வந்த மர்மநபர்கள் தப்பியோட்டம்!!

17 November 2020, 3:22 pm
Hotel Bomb- Updatenews360
Quick Share

தஞ்சாவூர் : நள்ளிரவில் ஹோட்டல் மீது வெடிகுண்டு வீசி விட்டு இருசக்கர வாகனத்தல் தப்பியோடிய மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தஞ்சை கரந்தையை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் முத்துக்குமார். இவர் கரந்தை மாநகராட்சி பள்ளி அருகே ஹோட்டல் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று இரவு இந்த ஓட்டலில் ஏராளமானோர் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். இரவு 11 மணியளவில் அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் திடீரென நாட்டு வெடி குண்டை உணவகத்தின் மீது வீசினார்.

பின்னர் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் உணவகத்தின் கண்ணாடி பெட்டி சுக்குநூறாக நொறுங்கியது. அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த ராமாபுரத்தை சேர்ந்த வெங்கடேஸ்வரன் உட்பட இருவர் காயமடைந்தனர் .

மேலும் கடையின் உரிமையாளர் முத்துக்குமாருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக வெங்கடேஸ்வரனை மீட்டு தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த வெடிகுண்டு தாக்குதலில் உணவகம் லேசாக சேதமடைந்தது. இது குறித்து தகவலறிந்த தஞ்சை மேற்கு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து முன்விரோதம் காரணமாக யாராவது வெடிகுண்டு வீசி சென்றார்களா? அல்லது வேறு ஏதும் காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது வெடிகுண்டு நிபுணர்கள் உணவகத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சையில் நள்ளிரவில் நடந்த இந்த வெடிகுண்டு வீச்சு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Views: - 21

0

0