இந்திய கம்யூனிஸ்ட் பிரமுகர் கொலை…24 மணிநேரத்தில் குற்றவாளிகளை மடக்கி பிடித்த போலீசார்..! விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
Author: Babu Lakshmanan11 November 2021, 7:19 pm
திருவாரூர் : நீடாமங்கலம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பிரமுகர் நடேச தமிழார்வன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 24 மணிநேரத்தில் குற்றவாளிகள் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் நீடாமங்கலம் காவல் நிலையத்தில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது :- நீடாமங்கலம் காவல் சரகத்திற்க்கு உட்பட்ட பகுதியில் நேற்று மாலை நடைபெற்ற நடேசன் தமிழார்வன் கொலை சம்பவம் தொடர்பான வழக்கில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் கொலை வழக்காக பதிவு செய்யப்பட்டு, அதன் பேரில் தடயங்கள் சேகரிக்கப்பட்டு, சி.சி.டி.வி.கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் அடிப்படையில் முக்கிய கொலை குற்றவாளியான பூவனூர் அக்கரகாரம் பகுதியை சேர்ந்த ராஜ்குமார், அவரது கூட்டாளிகள் பாடகச்சேரி மாதவன், பூவனூர் அக்கரகாரம், மனோஜ், அறையூர் தென்பாதி சேனா (எ) சேனாதிபதி, அறையூர் தென்பாதி
எழிலரசன் உள்ளிட்ட 5 பேர் இன்று காலை 7 மணி அளவில் நீடாமங்கலம் அருகில் உள்ள மூணாறு தலைப்பில் தலைமறைவாக இருந்துள்ளனர். அவர்களை கைது செய்துள்ளோம்.
மேலும், குற்றவாளிகள் கொலைக்கு பயன்படுத்திய கத்தி,இருசக்கர வாகனம் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த கொலை வழக்கில் தொடர்புடைய நபர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். 5 துணை காவல் கண்காணிப்பாளர்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
சம்பவ இடத்தில் இருந்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு அவர்களிடம் புலன் விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் தொடர்புடையவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். திருவாரூர் மாவட்டத்தில் தேவையான அளவில் காவலர்கள் இருக்கின்றனர். தற்போது மழை காலம் என்பதால் புயல், வெள்ளம் போன்ற பேரிடர் பணிகளில் காவலர்கள் பயன்படுத்தப்படுவதால், இப்பணிகள் முடிந்ததும், சட்டம் ஒழுங்கு பணியில் காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இந்த கொலை வழக்கு தொடர்பான விசாரணையை வடுவூர் காவல் ஆய்வாளர் முத்து லட்சுமி விசாரணை செய்து வருகிறார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு நடேச தமிழார்வ னின உறவினர் பூவனூரை சேர்ந்த ராஜ்குமாரின் குடும்ப தகராறில் தமிழார்வன் தலையிட்டதால் ஏற்பட்ட பிரச்சனையில், ராஜ்குமாரின் வளர்ச்சிக்கு தடையாக இருந்ததன் காரணத்தால், இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருக்கிறது.
பூவனூர் ராஜ்குமார் நீடாமங்கலம் காவல்
நிலைய போக்கிரி பதிவேடு குற்றவாளியாவார். இவர் பொதுமக்களை அச்சுறுத்தல் செய்தது தொடர்பாக இவர் மீது நீடாமங்கலம் காவல் நிலையத்தில் சமீபத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் இருந்தார். இந்த நிலையில், பிணையில் வெளிவந்த அவர், முன்விரோதம் காரணமாக நடேச தமிழார்வனை கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார்.
கொலை சம்பவம் நடந்த 14 மணி நேரத்தில் கொலை குற்றத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளை கைது செய்த தனிப் படையினரை மத்திய மண்டல காவல்துறை தலைவர் தஞ்சை சரக காவல் துறை துணை தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டினார்.
இந்த சம்பவம் தொடர்பாக நீடாமங்கலம் பகுதியில் தொடர் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் 850 காவல் அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
0
1