கர வேட்டி கட்டி வந்தால் கறி பிரியாணி இலவசம்:திமுக வேட்டிக்கு மட்டும் கூடுதல்.. விருதுநகர் அருகே விநோத சலுகை!!!

Author: kavin kumar
8 August 2021, 9:59 pm
Quick Share

விருதுநகர்: அருப்புக்கோட்டையில் திறப்பு விழா சலுகையாக திமுக கரை வேட்டி அணிந்து வருபவர்களுக்கு மூன்று சிக்கன் பிரியாணிகள் இலவசம் என்ற அறிவிப்பால் கடையின் முன்பு பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகே தனியார் உணவகம் இன்று திறப்பு விழா நடைபெற்றது. இந்த திறப்பு விழாவில் சிறப்பு சலுகையாக தமிழர்களின் பாரம்பரிய உடையான வெள்ளை சட்டை மட்டும் அணிந்து வந்தால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், அதே போல் வெள்ளை சட்டை மற்றும் வெள்ளை வேட்டி அணிந்து வந்தால் இரண்டு சிக்கன் பிரியாணி இலவசம் எனவும், இதற்கு ஒருபடி மேலாக திமுக கரை வேட்டி அணிந்து வந்தால் மூன்று சிக்கன் பிரியாணி இலவசம் என்ற சிறப்பு திறப்பு விழா சலுகையை அறிவித்து இருந்தது. இந்த அறிவிப்பை அடுத்து கடை முன்பு கூட்டம் கூடுவதை தவிர்க்க சமூகம் இடைவெளியை பின்பற்ற இரண்டு நாட்களுக்கு முன்பே முன்பு தடுப்பு அமைக்கப்பட்டன. இதை அடுத்து இன்று காலை முதல் அப்பகுதியில் பிரியாணி பிரியர்கள் இலவசமாக பிரியாணியை வாங்க கடையின் முன்பு கூடினார்கள்.

இந்த நிலையில் இன்று திறப்பு விழா காணப்பட்ட சில நிமிடங்களிலேயே இலவச பிரியாணி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது. பிரியாணியும் வாங்க சிறுவர் முதல் பெரியவர்கள் என அனைவரும் கடையின் முன்பு முண்டியடித்துக் கூடினர். பொதுமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டதால் உணவக நிர்வாகம் வரிசையில் நின்ற அனைவருக்கும் இலவச சிக்கன் பிரியாணியை வழங்கினார்கள். உணவகம் கூறியதைப் போல் திமுக கரை வேட்டி அணிந்து வந்தால் மூன்று சிக்கன் பிரியாணிகள் இலவசமாக வழங்கப்பட்டன. திறப்பு விழா சலுகை என வெள்ளை சட்டை வெள்ளை வேஷ்டி அணிந்து வந்தால் இலவச பிரியாணி என வித்தியாசமான சலுகை அறிவிப்பால் 3,000 நபருக்கு இலவச பிரயாணிகள் வழங்கப்பட்டன.

Views: - 258

0

0