பிரசவத்திற்கு அனுமதிக்கப்பட்ட பெண்ணும், குழந்தையும் இறப்பு : ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரபரப்பு!!

28 September 2020, 2:41 pm
Pregnancy Woman Dead- updatenews360
Quick Share

ராணிப்பேட்டை : ஆரம்ப சுகாதார மையத்தில் அனுமதிக்கப்பட்ட கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்தே பிறந்த நிலையில் சிறிது நேரத்தில் பெண்ணும் இறந்ததால் செவிலியர்கள் தவறான சிகிச்சையே காரணம் என உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ராணிப்பேட்டை அம்மன் கோயில் தெரு பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் நேற்று இரவு ஏற்பட்ட பிரசவ வலியால் ராணிப்பேட்டை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சிகிச்சைக்காக கனேசனின் மனைவி அனுமதிக்கப்பட்ட போது அங்கு மருத்துவர்கள் இல்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் பிரசவத்தை செவிலியர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள்களே பார்த்ததாக கூறப்படும் நிலையில் பிறந்த குழந்தை இறந்தே பிறந்ததாக கூறியுள்ளனர்.

இந்த நிலையில் பிரசவத்திற்கு பிறகு அர்ச்சனாவிற்கு தொடர்ச்சியாக வாயில் நுரை தள்ளியபடி இருந்ததால் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக உடனடியாக அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த அர்ச்சனாவின் உறவினர்கள் அர்ச்சனா மற்றும் குழந்தையின் சடலத்தை நகர ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் போட்டு தற்பொழுது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை என்றும் சிகிச்சை அளிப்பதில் ஏற்பட்ட கவனக்குறைவே இருவரின் இறப்புக்கு காரணம் எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நகரின் மையப்பகுதியில் உள்ள மருத்துவமனை என்பதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Views: - 6

0

0