தமிழக-கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு: இ-பாஸ் இன்றி வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு..!

9 July 2021, 12:35 pm
Quick Share

கோவை: கேரளாவில் இருந்து கோவை வருவோருக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், இ- பாஸ் இல்லாத வாகனங்கள் திருப்பி அனுப்பப்பட்டன.

கேரளாவில் இருந்து கோவை மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளதால் இன்று முதல் அனைத்து சோதனைச் சாவடிகளிலும் தீவிர சோதனை நடைபெறும் என்றும், கொரோனா இல்லை என்று பரிசோதனை அறிக்கை இருந்தால் மட்டுமே கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

கேரளா மாநிலத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், அந்த மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து கோவை மாவட்டத்தில் கேரளா எல்லையையொட்டியுள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறை, வருவாய்த்துறை, சுகாதாரத்துறை ஆகியோர் அடங்கிய குழுவினர் அமைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை வாளையார், வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச்சாவடிகள், வால்பாறை, ஆனைக்கட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள முக்கிய சோதனைச்சாவடிகளில் இன்று முதல் தீவிர சோதனை நடத்தப்படும்.

இ-பாஸ் மற்றும் கொரோனா இல்லை என்ற மருத்துவ பரிசோதனை அறிக்கையுடன் வர வேண்டும். அவ்வாறு வந்தால்தான் கோவை மாவட்டத்துக்குள் அனுமதிக்கப்படுவார்கள். இ-பாஸ் இருந்தும், கொரோனா இல்லை என்ற பரிசோதனை அறிக்கையை காண்பிக்காவிட்டால் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவை மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு செல்லலாம், ஆனால் வரும்போது கொரோனா பரிசோதனை அறிக்கை, இ-பாஸ் அவசியமாகும்.
எல்லைப்பகுதியில் தொழில் செய்பவர்கள் தினமும் வந்து செல்லும் பிரச்சினையில் ஏற்கனவே உள்ள நடைமுறை கடைபிடிக்கப்படும். கேரளாவில் இருந்து வரும் ரயில்களில் இருந்து இறங்கும் பயணிகளை கண்காணிக்க போத்தனூர், கோவை ரயில் நிலையம் ஆகிவற்றில் கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பஸ் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

Views: - 161

0

0