வீடு கட்டுவதற்கு பணம் தர மறுப்பு : தாய், தந்தையை அடித்தே கொன்ற மகன்
6 March 2021, 6:49 pmதருமபுரி : தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே வீடு கட்ட பணம் தராததால் தாய் தந்தை இருவரையும் அடித்துக் கொலை செய்த மகன் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
தருமபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பூச்செட்டிஅள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன். இவரது மனைவி சின்னராஜி. இவர்களுக்கு ராமசாமி என்ற மகனும், சுமதி என்ற மகளும் உள்ளனர். இதில், மகன் ராமசாமி பூச்செட்டிஅள்ளி கிராமத்தில் இருசக்கர வாகன பழுது பார்க்கும் கடை வைத்து வேலை செய்து வருகிறார். ராமச்சந்திரன் தனது மனைவி சின்னராஜியுடன் பூச்செட்டிஅள்ளியில் தனியாக வசித்து வருகின்றனர். இவர்களுக்கு அருகே உள்ள ஒரு வீட்டில் மகன் ராமசாமி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனியாக வசித்து வருகிறார்.
ராமசாமியின் தாயார் சின்னராஜி பெயரில் பென்னாகரம் அருகே உள்ள பி.அஹ்ரகாரம் பகுதியில் உள்ள நிலத்தின் ஒரு பகுதியை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகன் மற்றும் மகளுக்கு பிரித்து கொடுத்துள்ளார். ராமசாமியின் சகோதரி சுமதி தனக்கு கொடுத்த நிலத்தில் புதிதாக வீடுகட்டி வருகிறார்.
இந்த நிலையில், மெக்கானிக் ராமசாமி தானும் புதிய வீடுகட்ட வேண்டும் என்பதால், அதற்கு தனது தாயாரிடம் பணம் கேட்டு தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார். நேற்று இரவு குடிபோதையில் தாயின் வீட்டிற்கு சென்ற ராமசாமி, தனது தாய் சின்னராஜியிடம் மீண்டும் பணம் கேட்டு தகராறு செய்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த ராமசாமி, தான் வைத்திருந்த இரும்பு கம்பியால் தாய் சின்னராஜியை தாக்கியதில் மண்டை உடைந்து ரத்த வெள்ளத்தில் தனது வீட்டு வாசலில் சாய்ந்துள்ளார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு தடுக்க வந்த தந்தை ராமச்சந்திரனையும் அதே இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில், தாய், தந்தை இருவரும் ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளனர். இவர்களது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து ஆம்புலன்ஸை வரவழைத்துள்ளனர். அதற்குள் இருவரும் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர். இதனையறிந்த மெக்கானிக் ராமசாமி அங்கிருந்து தப்பி இண்டூர் காவல் நிலையத்தில் தானாக முன் வந்து சரணடைந்தார்.
அதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற இண்டூர் காவல்துறையினர் இருவரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து இண்டூர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். பணம் கேட்டு தராத தாய், தந்தையரை பெற்ற மகனே அடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
0
0