திரையரங்குகளில் நான் பேரம் பேசினேனா? நிரூபிக்க தயாரா என ஸ்டாலினுக்கு அமைச்சர் கேள்வி!!

6 February 2021, 2:06 pm
Stalin Vs Kadambur Raju - Updatenews360
Quick Share

தூத்துக்குடி : திரையரங்குகளில் நான் பேரம் பேசியதாக கூறும் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடருவேன் என்று தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உழவர் பெருந்தலைவர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் நாரயணசாமி நாயுடு 96வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு பயணியர்விடுதி முன்பு அமைக்கப்பட்டு இருந்த அவரது திருவுருவபடத்திற்கு தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ மலர் தூவி மரியாதை செய்தார்.

தொடர்ந்து தமிழக அரசு விவசாய கடன் தள்ளுபடி செய்ததற்காக விவசாயிகள் சங்கத்துடன் இணைந்து பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார். இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ செய்தியாளர்களிம் பேசுகையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போன்று தரம் தாழ்ந்து பேச நாங்கள் தயராக இல்லை, பொய்யான தகவல்களை மு.க.ஸ்டாலின் கூறிவருகிறார், இது அவருக்கு அழகல்ல என்று கூறினார்.

மேலும் கோவில்பட்டி 2வது குடிநீர்திட்டம் பற்றி தவறான தகவல்களை மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். என்னிடம் போதிய ஆதாரம் உள்ளது. ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை மக்களிடம் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். சுதந்திரத் தினத்தினையும், குடியரசு தினத்தினையும் மாற்றி சொல்லக்கூடியவர் மு.க.ஸ்டாலின் என்றும், சராசரி அறிவு இல்லாத அமைச்சர் என்று என்னை பற்றி மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின் அறிவினை தான் சோதிக்க வேண்டிய நிலை உள்ளது. ரூ 2500ம் 1500ம் சேர்ந்து ரூ.5000 என்று சொல்பவர் மு.க.ஸ்டாலின் என்றும், தரமான சாலைகள் அமைக்கப்பட்டு இருப்பதால் தான் மு.க.ஸ்டாலின் சொகுசாக செல்கிறார்.

தேர்தலில் மக்களுக்கு என்ன திட்டங்கள் செய்யப்படும் என்று சொல்லி தேர்தல் பிரச்சாரம் செய்து ஆட்சியை பிடித்தவர் ஜெயலலிதா என்றும், எதிர்காட்சி தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்று கூறலாம். ஆனால் அமைச்சர்களை புழல் சிறைக்கு அனுப்புவோம் என்று கூறுகிறார் என்றும், மு.க.ஸ்டாலின் சர்வாதிகரியா இல்லை ஹிட்லரா என்று தெரியவில்லை, இப்படி மு.க.ஸ்டாலின் பேசுவது எங்களுக்கு நல்லது தான். எங்களுக்கு வாக்கு வங்கி அதிகரிக்கும் என்றும், கொரோனா காலத்தில் திரையரங்குகள் மூடி இருந்த நிலையில் நான் பேரம் பேசியதாக மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். திரையரங்கு மூடி இருந்த நிலையில் நான் பேரம் பேசியது போன்றும், இதற்கு மு.க.ஸ்டாலின் இடைத்தராக இருந்த மாதிரி கூறுகிறார்.

திரைத்துரையினரை சீரழித்தவர்கள் திமுகவினர் என்றும், திமுக ஆட்சிகாலத்தில் திரைப்படங்களை சுதந்திரமாக வெளியிட முடியாத நிலை இருந்தது. திமுக குடும்ப நிறுவனம் ரெட்ஜெயிண்ட் மூலமாக திரைப்படங்களை வெளியிட முடியும் என்ற நிலை இருந்தது.

திமுக ஆட்சிகாலத்தில் திரைத்துறையில் சர்வாதிகார போக்கு இருந்தது. ஆனால் இன்றைக்கு நிலை அப்படி இல்லை என்றும், குறைந்த பட்ஜெட் படம் தயாரிப்பவர்கள் கூட எளிதில் திரையிடக்கூடிய வெளிப்பட தன்மை திரைத்துறைக்கு வந்துள்ளது. குறைந்த செலவில் படம் தயாரிப்பவர்களுக்கு ரூ 7 லட்சமாக மானிய தொகையை உயர்த்தியது அதிமுக அரசு தான் என்றும், திரையரங்கு கட்டணத்தினை வரைமுறைப்படுத்தியது அதிமுக அரசு, திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றும் கூறினார்.

திமுக ஆட்சிகாலத்தில் கோவில்பட்டி தொகுதியில் என்ன திட்டங்கள் செயல்படுத்தினார்கள் என்று மு.க.ஸ்டாலினால் கூற முடியுமா ?, மக்களுக்கு தவறான தகவல் மற்றும் அவதூறாக பேசியதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மீது வழக்கு தொடரப்படும். முதல்வர் அனுமதியுடன் வழக்கு தொடர தயராக உள்ளேன் என்றும், திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் தான் சொத்துகுவிப்பு வழக்குகளில் தற்பொழுது நீதிமன்றம் சென்று வருகின்றனர்.

தேர்தல் முடிவுக்கு பின்னர் சிறைக்கு செல்ல போகிறவர்கள் திமுகவினர் தான் என்றும், இதனை மறைப்பதற்காக அதிமுக அமைச்சர்கள் மீது குற்றம்சாட்டி வருகிறார்.திரையரங்குகளில் நான் பேரம் பேசியதாக கூறும் மு.க.ஸ்டாலின் நிரூபிக்க தயாரா ? என்றும், சொன்னதை செய்யும் அரசு அதிமுக என்றும், தேர்தல் அறிக்கை என்ற பெயரில் திமுக மக்களை ஏமாற்றுகிறது.

2 ஏக்கர் நிலம் தரப்படும் என்று சொன்ன திமுக அதை வழங்கவில்லை என்றும்,தமிழகம் முழுவதும் மு.க.ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார். மக்கள் ஏமாளிகள் இல்லை என்பது தேர்தல் முடிவு காட்டும் என்றார்.

Views: - 0

0

0