தோண்ட தோண்ட வெளிவரும் ‘கீழடி நாகரீகம்’: அகழாய்வில் பழமையான கல் தூண் கண்டெடுப்பு..!!
Author: Aarthi Sivakumar10 August 2021, 6:07 pm
சிவகங்கை: கீழடி அகழாய்வில் ஒரு அடி உயரம், ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் இந்த ஆண்டு பிப்ரவரி முதல் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவரை 850 க்கும் மேற்பட்ட பழமையான தொல்பொருட்கள் இதில் கண்டறியப்பட்டுள்ளன.
அந்த வகையில் கீழடியில் இதுவரை மண்பானை, காதில் அணியும் தங்க வளையம், பகடை, நெசவு தொழிலுக்கு பயன்படும் தக்களி , கற்கோடாரி, கருப்பு, சிவப்பு பானை ஓடுகள், மண் குவளைகள், சங்கு வளையல்கள், சுடுமண் பொம்மை மற்றும் கண்ணாடி பாசிகள், வெள்ளிக்காசு, செப்பு மோதிரம், உறைகிணறுகள், சுடுமண் காதணி போன்றவை கண்டறியப்பட்டன. மேலும் அகரத்தில் பாசி மணிகள், உறை கிணறு போன்றவையும் கண்டறியப்பட்டது.
அவற்றை தொடர்ந்து தற்போது ஒரு அடி உயரம் ஒரு அடி அகலம் கொண்ட பழமையான கல் தூண் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து தொல்லியல் துறையினர் கூறும்போது, மேற்கொண்டு அகழாய்வு செய்யும் போது பழமையான இந்த கல் தூணின் உயரம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதன் வடிவம் முழுமையாக வெளிக்கொணரப்பட்ட பின்னர் அதன் பயன்பாடு குறித்து முழுமையாக தெரியவரும் என தெரிவித்துள்ளனர்.
0
0